தெஹ்ரான், 13 மார்ச் 2026 : ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த 28ஆம் தேதி வான்வழி தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்ளிட்ட பலர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. இதன் பின்னர், மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகளையும் இஸ்ரேலையும் குறிவைத்து ஈரான் தொடர்ந்து பதிலடி தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இதனால் அந்த பிராந்தியத்தில் பதற்றமான நிலை தொடர்கிறது.
இந்த சூழலில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பெர்தொஷி சதுக்கத்தில் இன்று பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ‘குவாட்ஸ் தின’ பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
பேரணி நடைபெற்றுக் கொண்டிருந்த சதுக்கத்தை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு பெண் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




