என் தமிழ்

இனவாதத்தை தூண்டும் விவகாரத்தில் இரட்டை போக்கு வேண்டாம் – 75 இயக்கங்கள் சார்பில் பிரதமர் கவனத்திற்கு மகஜர் வழங்கப்பட்டது

கோலாலம்பூர், 13 மார்ச் 2026 : நாட்டில் இனவாதத்தைத் தூண்டும் சம்பவங்களை கையாளும் போது அதிகாரிகள் இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிக்கக் கூடாது என்று வலியுறுத்தி, 75 சமூக மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் கவனத்திற்கு மகஜர் ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக சமூக செயற்பாட்டாளர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக நாட்டில் இன உணர்வுகளைத் தூண்டும் வகையிலான கருத்துகள் மற்றும் செயல்கள் அதிகரித்து வருவது கவலைக்குரியதாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இத்தகைய சம்பவங்கள் தொடர்பாக சட்டம் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

சில சம்பவங்களில் இனவாத கருத்துகளை வெளியிடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஆனால், சில வேறு நிகழ்வுகளில் அதே அளவிலான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ற தோற்றம் உருவாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலை நீடித்தால் அது சமூக ஒற்றுமைக்கும், பல இன மக்களைக் கொண்ட மலேசியாவின் நல்லிணக்கத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.

இதனைத் தொடர்ந்து, நாட்டில் இனவாதத்தைத் தூண்டும் எந்தவொரு கருத்தோ அல்லது செயலோ இருந்தாலும் அது எந்த இனத்தவரிடமிருந்து வந்தாலும் சட்டத்தின் முன் ஒரே அளவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என 75 அமைப்புகள் இணைந்து பிரதமரிடம் மகஜர் மூலம் கோரிக்கை வைத்துள்ளன.

மேலும், சமூக நல்லிணக்கத்தையும் பரஸ்பர மரியாதையையும் பாதுகாக்க அரசு தெளிவான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த மகஜரில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மகஜர் பிரதமர் அலுவலகத்திற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to Top