கோலாலம்பூர், 12 மார்ச் 2026 : நாட்டின் அமைதியையும் பொது ஒழுங்கையும் பாதுகாப்பது காவல் துறையின் முதன்மை பொறுப்பு என்றும், அந்த பொறுப்பில் எந்தவித சமரசமும் இருக்கக் கூடாது என்றும் Gobind Singh Deo தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், சமீப காலமாக இன வெறுப்பைத் தூண்டும் செயல்களுக்கு எதிராக போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலை கவலை அளிப்பதாகவும், இது நாட்டின் ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் நேரடி அச்சுறுத்தலாக மாறும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அண்மையில் குர்ஆன் அவமதிக்கப்பட்ட சம்பவம் குறித்து அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுத்தது பாராட்டத்தக்கது என்றும், அத்தகைய நடத்தை சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதற்கான தெளிவான முன்னுதாரணமாக அது அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அதேபோல், இந்து சமூகத்தின் புனித மத அடையாளமான சூலத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்தவொரு அவமதிப்பு அல்லது தாக்குதலுக்கும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதுபோன்ற சம்பவங்களில் காவல்துறை தாமதமின்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இத்தகைய வழக்குகளில் தாமதம் ஏற்படுவது இனங்களுக்கிடையிலான பதற்றத்தை அதிகரிக்கக்கூடும் என்றும், இன நல்லிணக்கத்தையும் தேசிய ஒற்றுமையையும் பாதுகாக்க சட்டம் எந்தவித பயமோ பாரபட்சமோ இல்லாமல் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் எழுப்பப்பட்டு விவாதிக்கப்பட்டதாக அவர் கூறினார். அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவாக இருந்தாலும், அதை அமலாக்க நிறுவனங்கள் உறுதியாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மத சின்னங்களை அவமதித்த சம்பவங்களுக்கு காரணமானவர்களை விரைவாக கண்டறிந்து நீதிமன்றத்தில் நிறுத்த காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மலேசியா சட்டவிரோத செயல்களுக்கும் அல்லது இனக் கலவரத்துக்கு வழிவகுக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் இடமளிக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், நாட்டில் நிலவும் அமைதியை குலைக்க முயல்பவர்களிடமிருந்து பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல்துறை உடனடியாக செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கோபிந்த் சிங் டியோ தற்போது Gobind Singh Deo, Democratic Action Party (ஜ.செக) தேசியத் தலைவராகவும், Damansara நாடாளுமன்ற உறுப்பினராகவும், மலேசியாவின் இலக்கவியல் அமைச்சராகவும் உள்ளார்.




