என் தமிழ்

சிலிண்டர் தட்டுப்பாடு தாக்கம்: பெங்களூருவில் 40% ஓட்டல்கள் மூடப்பட்டன

பெங்களூரு, 12 மார்ச் 2026 : ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டாக கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி வான்வழி தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து நடந்த தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதலில் ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவரது மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டதாகவும் ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.

இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்ற நிலை உருவாகியுள்ளது. ஈரானும் பதிலடி தாக்குதல்களை மேற்கொண்டு வருவதால் மோதல் தொடர்ந்து நீடிக்கிறது. மேற்கு ஆசியாவில் நிலவும் இந்த போர்ச்சூழல் உலகளாவிய எரிபொருள் விநியோகத்தையும் பாதித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.

மேலும், ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்தை ஈரான் தடுத்து நிறுத்தியுள்ளது. இதனால் பல நாடுகளுக்கு எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக இந்தியாவில் இயற்கை எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் தாக்கம் கர்நாடகத்தில், குறிப்பாக பெங்களூருவில் தெளிவாக காணப்படுகிறது. கியாஸ் சிலிண்டர் கிடைக்காததால் ஓட்டல்கள், உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் உணவு தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிறிய ஓட்டல்கள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன. சில பெரிய ஓட்டல்களில் இருப்பில் உள்ள சிலிண்டர்களை பயன்படுத்தி செயல்பாடு தொடர்கிறது.

முன்தினம் பெங்களூருவில் சுமார் 20 சதவீத ஓட்டல்கள் மூடப்பட்ட நிலையில், இரண்டாவது நாளான நேற்று டீக்கடைகள் மற்றும் துரித உணவகங்களும் உட்பட பல இடங்கள் மூடப்பட்டன. இதனால் நகரில் நேற்று மட்டும் 40 சதவீத ஓட்டல்கள் மூடப்பட்டதாக ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலை நீடித்தால், இன்னும் சில நாட்களில் பெங்களூருவில் உள்ள சுமார் 10 ஆயிரம் ஓட்டல்களும் மூடப்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது பல ஓட்டல்களில் அரிசி சாதம், தோசை, இட்லி, சாம்பார் போன்ற குறைந்த அளவிலான முக்கிய உணவு வகைகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.

சில இடங்களில் போதிய இடவசதி உள்ள ஓட்டல்கள் விறகு அடுப்புகளை பயன்படுத்தி உணவு தயாரிக்கத் தொடங்கியுள்ளன. அதன் மூலம் அத்தியாவசியமான சில உணவுகளை மட்டும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

Scroll to Top