நரேந்திர மோடியின் அமெரிக்கா வருகைக்கு குலுக்கல் முறையில் பார்வையாளர்கள் தேர்வு

நரேந்திர மோடியின் அமெரிக்கா வருகைக்கு குலுக்கல் முறையில் பார்வையாளர்கள் தேர்வு

7643584694_f346cb8176_b

இந்த மாத இறுதியில் அமெரிக்கா செல்லும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு வரவேற்பு நிகழ்ச்சியை வழங்குவதற்காக அங்கு சமீபத்தில் இந்திய-அமெரிக்க சமூக அறக்கட்டளை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

இந்த அமைப்பானது வரவேற்பு நிகழ்ச்சிக்காக நியுயார்க் நகரத்தில் உள்ள மேடிசன் கார்டன் சதுக்கத்தை முன்பதிவு செய்துள்ளது. இங்கு 20,000 பார்வையாளர்கள் மட்டுமே அமர்வதற்கு வசதி உள்ளது. மோடியின் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பார்வையாளர்களுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. ஆனால் அவர்கள் இதற்காகப் பதிவு செய்துகொள்ள வேண்டிய கடைசி நாளாக இந்த மாதம் 7ஆம் தேதியினை அமைப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதில் இந்த வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதில் பங்கெடுத்துக் கொண்ட 407 இந்திய-அமெரிக்க சமூக அமைப்பினர் மற்றும் மத நிறுவனங்களிடம் இருந்து கடந்த திங்கட்கிழமை வரை அனுமதி விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதற்கென தொலைதூரப் பகுதிகளான அலாஸ்கா, ஹாவாய் உட்பட வந்துள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கையே 20,000த்தைத் தாண்டியுள்ளது. பின்னர் செவ்வாய்க்கிழமை முதல் இதில் கலந்துகொள்ள விரும்பும் பொதுமக்களுக்கும் விண்ணப்பங்களை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குலுக்கல்மூலம் பார்வையாளர்களைத் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மோடியின் பிரபலத்திற்கு 60,000 ,70,000 பேர் அமரும் அரங்கம் கூட தேவைப்படும். ஆனால் நியுயார்க், நியு ஜெர்சி பகுதியில் உள்ள விளையாட்டு மைதானங்கள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அடுத்த தேர்வான மேடிசன் சதுக்கத்தையே எங்களால் இந்த நிகழ்ச்சிக்குப் பெறமுடிந்தது என்றும் அமைப்பாளர்களில் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுமட்டுமின்றி இந்த நிகழ்ச்சியைப் பதிவு செய்ய இந்தியாவிலும், அமெரிக்காவிலும் பல ஊடக நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதாகவும் அவர் கூறினார்.