புதுடெல்லி, 09 மார்ச் 2026 : எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அவசியம். அந்த தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
2026–27 கல்வியாண்டுக்கான ‘நீட்’ தேர்வு அறிவிப்பு கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி வெளியிடப்பட்டு, பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கியது. விண்ணப்பிக்க நேற்று கடைசி நாளாக இருந்தது.
ஆனால் கடந்த சில நாட்களாக விண்ணப்பப் பதிவில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர் புகார் தெரிவித்தனர். இதனால் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில் ‘நீட்’ தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) விண்ணப்பிக்க கடைசி தேதியை நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, வருகிற 11-ஆம் தேதி (புதன்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம். அன்றைய தினம் இரவு 11.50 மணிக்குள் விண்ணப்பக் கட்டணமும் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த அவகாசத்திற்குப் பிறகு விண்ணப்பிக்க கூடுதல் நேரம் வழங்கப்படமாட்டாது என்றும் என்.டி.ஏ. அறிவுறுத்தியுள்ளது.





