என் தமிழ்

காரக் சிவன் கோவிலை குறித்து சமூக ஊடகங்களில் பரவும் ஆன்லைன் ஒப்புதல் படிவம் – சங்கம் மறுப்பு

கோலாலம்பூர், 06 மார்ச் 2026 : சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் “Devotee Support & Consent Form (Karak Shivan)” என்ற ஆன்லைன் படிவத்துடன் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று பெர்சதுவான் பெங்கானுட் தே்வா அத்மா அருள் ஜோதி முனீஸ்வரர் (Persatuan Penganut Dewa Athma Arul Jothy Muneeswarar) சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த ஆன்லைன் படிவத்தை சங்கம் உருவாக்கவில்லை, வெளியிடவில்லை, அனுமதி வழங்கவில்லை அல்லது ஆதரிக்கவில்லை என்றும், அந்த படிவத்துடன் தொடர்புடைய எந்த நடவடிக்கையிலும் சங்கம் ஈடுபடவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், கோவிலைச் சார்ந்த எந்த மனு அல்லது கையொப்ப இயக்கத்தையும் சங்கம் தொடங்கியதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

காரக் சிவன் என அறியப்படும் ஓம் ஸ்ரீ அத்மா அருள் ஜோதி முனீஸ்வரர் ஆலயம், பெர்சதுவான் பெங்கானுட் தே்வா அத்மா அருள் ஜோதி முனீஸ்வரர் என்ற சங்கத்தின் நிர்வாகத்தில் இயங்கி வருவதாகவும், அந்த சங்கம் பதிவு செய்யப்பட்ட அமைப்புகளுக்கான பதிவுத்துறையான ROS-இல் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் அரசியலமைப்பு விதிமுறைகளும் ஆண்டு பொதுக்கூட்ட தீர்மானங்களும் (AGM resolutions) அடிப்படையாகக் கொண்டு கோவில் நிர்வாகம் நடத்தப்பட்டு வருகிறது. கோவில் வளாகத்தைச் சார்ந்த அதிகாரப்பூர்வ விவகாரங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு செயல்படுவதற்கான பொறுப்பும் சங்கத்திற்கே இருப்பதாகவும் விளக்கப்பட்டுள்ளது.

அரசாங்க அதிகாரிகளுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் உள்ளிட்ட அனைத்து கோவில் தொடர்பான விவகாரங்களும் முறையான அதிகாரப்பூர்வ வழிகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதனால், பக்தர்கள் அமைதியாக இருக்கவும், தற்போது நடைபெற்று வரும் அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய செயல்களில் ஈடுபடாமல் இருக்கவும் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. கோவில் நிர்வாகம் தொடர்பான தகவல்களை சங்கம் வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளின் மூலமாக மட்டுமே பக்தர்கள் அறிந்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து பக்தர்களின் நலனையும் கருத்தில் கொண்டு அமைதி, நிலைத்தன்மை மற்றும் முறையான நடைமுறைகளைப் பேணுவதில் தாங்கள் உறுதியாக உள்ளோம் என்றும் சங்கம் தெரிவித்துள்ளது.

Scroll to Top