லண்டன், 06 மார்ச் 2026 : இங்கிலாந்துக்குள் சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசு பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கல்வி விசா மூலம் இங்கிலாந்துக்குள் நுழைந்த சிலர் பின்னர் அங்கேயே தஞ்சம் கோருவதற்கான சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான், கேமரூன், மியான்மர் மற்றும் சூடான் ஆகிய நான்கு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி விசா வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் அறிவித்துள்ளார்.
மேலும், ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட வேலை விசாவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி விசாவில் இங்கிலாந்து சென்ற ஆப்கானியர்களில் சுமார் 95 சதவீதம் பேர் அங்கேயே தஞ்சம் கோரியுள்ளதாக கண்டறியப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனை அமல்படுத்தும் நோக்கில் புதிய சட்ட திருத்தம் தொடர்பான முன்மொழிவு நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.





