டெல்லி, 05 மார்ச் 2026 : ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மத்திய கிழக்கில் போர்ப்பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், ஈரானின் கடற்படை கப்பல்களும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.
ஈரான் கடற்படைக்கு சொந்தமான ‘ஐரிஸ் டெனா’ என்ற போர்க்கப்பல் நேற்று அதிகாலை இலங்கை தெற்கு கடற்பகுதியில் இருந்து சுமார் 40 நாட்டிக்கல் மைல் தொலைவில் பயணம் செய்து கொண்டிருந்தது. அப்போது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று அந்த கப்பலை தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் கப்பல் கடுமையாக சேதமடைந்து கடலில் மூழ்கத் தொடங்கியது.
கப்பலில் இருந்தவர்கள் அவசர அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பல்களுடன் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விமானப்படை விமானங்களும் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த தாக்குதலில் கப்பலில் இருந்த 180 பேரில் 87 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச கடற்பகுதியில் சென்ற எதிரி நாட்டின் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்பகுதியில் ஈரான் போர்க்கப்பல் தாக்கப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்த கப்பல் சமீபத்தில் இந்தியாவுடன் நடைபெற்ற கூட்டு கடற்படை பயிற்சியில் பங்கேற்றதாகவும், பயிற்சியை முடித்து திரும்பியபோது இந்த சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், ஈரான் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்திய துறைமுகத்தை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. “இத்தகைய குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றதும், உருவாக்கப்பட்டதுமானவை” என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.





