மாஸ்கோ, 05 மார்ச் 2026 : ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி வான்வழி தாக்குதல் நடத்தின. தொடர்ந்து 5 நாட்கள் நீடித்த இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு பதிலடி தாக்குதலை ஈரானும் தீவிரப்படுத்தியதால், மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்றம் நிலவுகிறது.
மேற்காசியாவில் உருவாகியுள்ள இந்த மோதலை நிறுத்துமாறு சீனா, இந்தியா மற்றும் ரஷியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்து ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரவ் கூறுகையில், ஈரானுக்கு எதிரான அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலை தடுக்கக்கூடிய சூழலை உருவாக்குவதற்காக அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் ரஷியா மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.
மேலும், இந்த பிரச்சினையைத் தீர்க்க தொடர்புடைய நாடுகள், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் ஐ.நா. பொதுச் சபை உறுப்புநாடுகள் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுடன் ரஷியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் அவர் கூறினார்.
பொதுமக்கள் மற்றும் குடிமக்கள் பயன்படுத்தும் கட்டமைப்புகள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தினார். அதேசமயம், இந்த தாக்குதலின் உண்மையான இலக்கு என்ன என்பது குறித்து அமெரிக்க அரசியல்வாதிகளுக்கே தெளிவாக விளக்க முடியாத நிலை உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
மேலும், இந்த தாக்குதலின் பின்னணியில் பெர்சியன் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள நாடுகள், ஈரான் மற்றும் அரபு நாடுகளுக்கிடையில் பிளவை உருவாக்கும் முயற்சியும் காரணமாக இருக்கலாம் என அவர் கூறினார்.





