என் தமிழ்

ஈரான் போர் கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்குதல்

கொழும்பு, 05 மார்ச் 2026 : இந்திய கடற்படை ஆண்டுதோறும் நட்பு நாடுகளின் கடற்படைகளுடன் இணைந்து மிலான் என்ற பெயரில் கூட்டு கடற்படைப் பயிற்சியை நடத்தி வருகிறது. அந்த வகையில், கடந்த 18-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை வங்காள விரிகுடா கடலில் நடைபெற்ற இந்த பயிற்சியில் பல்வேறு நாடுகளின் கடற்படைகள் பங்கேற்றன. இதில் ஈரானைச் சேர்ந்த ஐஆர்ஐஎஸ் டினா ரக என்ற போர்க்கப்பலும் கலந்து கொண்டது.

பயிற்சி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, விசாகப்பட்டினத்தில் இருந்து ஈரானுக்கு அந்த போர்க்கப்பல் புறப்பட்டது. அந்த கப்பலில் ராணுவ வீரர்கள் உட்பட மொத்தம் 180 பேர் பயணம் செய்தனர்.

இன்று அதிகாலை, இலங்கையின் காலி நகரம் அருகே இந்தியப் பெருங்கடலில் சென்று கொண்டிருந்த அந்த ஈரான் போர்க்கப்பலை குறிவைத்து அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் ஈரான் போர்க்கப்பல் கடலில் மூழ்கியது.

இதையடுத்து கப்பலில் இருந்தவர்கள் அவசர உதவி கோரி அழைப்பு விடுத்தனர். தகவல் அறிந்த இலங்கை கடற்படை மற்றும் விமானப்படையினர் விரைந்து சென்று கடலில் தத்தளித்த 32 பேரை உயிருடன் மீட்டனர். ஆனால் கப்பலில் இருந்த மற்ற 148 பேரின் நிலை என்ன என்பது குறித்து அப்போது தெளிவில்லை.

இந்நிலையில், மூழ்கிய போர்க்கப்பலில் இருந்தவர்களில் 87 பேரின் உடல்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். இதனால் கடலில் மாயமான மீதமுள்ள 61 பேரின் நிலை குறித்து தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Scroll to Top