என் தமிழ்

ஈரான் தலைமை மாற்றம்: “புதிய தலைவரையும் கொல்வோம்” – இஸ்ரேல் சூளுரை

துபாய், 05 மார்ச் 2026 : ஈரான் மீது கடந்த 28-ந்தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து இராணுவ தாக்குதல் நடத்தி போரைத் தொடங்கின. இந்த தாக்குதலில் ஈரானின் உச்சபட்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அவருடன் அவரது மகள், மருமகன், பேத்தி உள்ளிட்ட குடும்பத்தினரும் உயிரிழந்தனர். காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த காமேனியின் மனைவி கோஜஸ்தேஹ் பாகெர்ஸதேவும் பின்னர் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, ஈரானில் புதிய உச்சபட்ச தலைவரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் வேகமடைந்துள்ளன. இதில் காமேனியின் மகன் மோஜ்தபா காமேனி புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புரட்சிகர இஸ்லாமியப் படைகளின் அழுத்தத்தால் இந்தத் தேர்வு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஈரானின் புதிய உச்சபட்ச தலைவராக யார் தேர்வு செய்யப்பட்டாலும் அவரை கொன்று விடுவோம் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேலின் ராணுவ அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தனது ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “இஸ்ரேலை அழிக்கவும், அமெரிக்கா மற்றும் சுதந்திர உலக நாடுகளையும் அச்சுறுத்தவும், பிராந்திய நாடுகளுக்கு எதிராக செயல்படவும் முயற்சிக்கும் ஈரானிய ஆட்சியால் நியமிக்கப்படும் எந்த தலைவரும் இலக்காக மாறுவார். அவர் யார், எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்கு முக்கியமில்லை. அவர் எங்கு இருந்தாலும் தேடி கண்டுபிடித்து தாக்குவோம். இதற்காக அமெரிக்காவுடன் இணைந்து முழு பலத்துடன் செயல்படுவோம்,” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இஸ்ரேலிய பிரதமரும், ராணுவமும் எப்போதும் முழு தயார்நிலையில் இருக்க வேண்டும்; போரில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் விடுத்துள்ள இந்த எச்சரிக்கை மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Scroll to Top