என் தமிழ்

தி கேரளா ஸ்டோரி 2 படத்தின் வெளியீட்டுக்கு ஐகோர்ட் தடை விதிப்பு

கொச்சி, 26 பிப்ரவரி 2026 : தி கேரளா ஸ்டோரி திரைப்படம் 2023ஆம் ஆண்டு சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியானது. கேரளாவைச் சேர்ந்த மூன்று நர்சிங் மாணவிகள் மூளைச்சலவை செய்யப்பட்டு, மதம் மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவது போன்ற கதையை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டது. வெளியான போது பல்வேறு சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்களை ஏற்படுத்தினாலும், வசூலில் வெற்றி பெற்றது.

இதன் தொடர்ச்சியாக தற்போது ‘கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட்’ என்ற பெயரில் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. இந்தப் படத்தை காமாக்யா நாராயண் சிங் இயக்கியுள்ளார். வெளியிடப்பட்ட டிரெய்லர் பெரும் விவாதத்தையும் எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது. குறிப்பாக, இந்துப் பெண்கள் வலுக்கட்டாயமாக மாட்டிறைச்சி உணவுக்குத் தள்ளப்படுவதாகக் காட்டப்படும் காட்சிகள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. பல அரசியல் தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, கேரள ஐகோர்ட்டில் தணிக்கைச் சான்றிதழை ரத்து செய்ய கோரி பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த கேரள ஐகோர்ட், படத்தை நேரடியாக பார்ப்பதாக தெரிவித்தது. நீதிபதி பெச்சு குரியன் தாமஸ், கலை வெளிப்பாட்டில் நீதிமன்றங்கள் தலையிடுவது சாதாரணமாக இல்லையெனினும், மாநிலத்தின் பெயர் தலைப்பில் இடம்பெற்றுள்ளதால் கேரள மக்களின் கவலைகளை புறக்கணிக்க முடியாது எனக் கூறினார். மேலும், சமூக வலைதளங்களில் இருந்து டிரெய்லர் மற்றும் டீசரை நீக்கவும் உத்தரவிடப்பட்டது. படம் மறுநாள் வெளியாக இருந்த நிலையில் பரபரப்பு நிலவியது.

படத்தை தடை செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், கேரளாவை பிரிவினை நோக்கில் சித்தரித்துள்ளதாகவும், இது சட்டம் மற்றும் ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டது. விசாரணை நடைபெற்று கொண்டிருந்தபோதும், படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது.

இதற்கிடையில், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீகுமார், படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகும் என்றும், வெளிநாட்டு விநியோக உரிமைகள் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதற்கு நீதிபதி, அனைத்து தரப்பினரின் வாதங்களும் கேட்கப்படும் வரை வெளியீட்டை ஒத்திவைக்கலாம் எனக் குறிப்பிட்டார். இரண்டு நிமிட டீசர் அடிப்படையில் நிவாரணம் வழங்க முடியாது என வழக்கறிஞர் வாதிட்டார்.

மேலும், படம் சட்டப்பூர்வ தேவைகளை பூர்த்தி செய்துள்ளதாகவும், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் சான்றளித்த பின் ஐகோர்ட் தனது கருத்தை மாற்ற முடியாது என்றும் அவர் தெரிவித்தார். டீசர் வெளியான 16 நாட்கள் கழித்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாகவும், மனுதாரர்கள் கேரள மக்களின் மொத்த மரியாதையை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூற முடியாது என்றும் வாதிடப்பட்டது.

இருப்பினும், நிலுவையில் உள்ள மனுக்கள் இறுதியாக விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் வரை படத்தை வெளியிட வேண்டாம் என தயாரிப்பாளர்களுக்கு கேரள ஐகோர்ட் உத்தரவிட்டது. சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டிய வழிகாட்டுதல்களை மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் முறையாக பின்பற்றவில்லை என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

Scroll to Top