புதுடெல்லி, 25 பிப்ரவரி 2026 : டெல்லியின் தொன்மையான வரலாற்றை போற்றும் வகையில், அதன் பெயரை “இந்திர பிரஸ்தா” என மாற்ற வேண்டும் என்று கோரி, பா.ஜ.க. எம்.பி. பிரவீன் கந்தேல்வால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், நாட்டின் தலைநகரான டெல்லியின் அடையாளத்துடன் இணைந்துள்ள வரலாற்று மற்றும் நாகரிக முக்கியத்துவம் குறித்து உங்கள் கவனத்திற்கு கொண்டு வரவே இந்த கடிதம் என தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்றாகத் திகழும் இந்த நகரத்தின் பெயர், அதன் உண்மையான வரலாற்று வேர்களையும் கலாசார பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்று இலக்கியங்கள், தொல்லியல் ஆதாரங்கள் மற்றும் நீண்டகால நாகரிக மரபுகளின் அடிப்படையில், டெல்லி பழங்காலத்தில் “இந்திர பிரஸ்தா” என்ற பெயரால் அறியப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மகாபாரதத்தில் கூறப்படுவது போல, பாண்டவர்கள் யமுனை நதிக்கரையில் இந்நகரை அமைத்ததாகவும், அது இன்றைய டெல்லியுடன் ஒத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது பயன்பாட்டில் உள்ள “டெல்லி” என்ற பெயர், நகரின் தொன்மை மற்றும் அதன் உண்மையான பாரம்பரியத்தை முழுமையாக பிரதிபலிக்கவில்லை என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.





