சென்னை, 17 பிப்ரவரி 2026 : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 16.02.2026 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொது மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், சிவகங்கை, சென்னை மற்றும் தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில், 29 கோடியே 17 இலட்சத்து 34 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட 506 புதிய வீடுகள் திறந்து வைக்கப்பட்டன. மேலும், 4 கோடியே 59 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவில் இவ்வீடுகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், கோயம்பத்தூர், திருவள்ளூர், நாமக்கல், இராமநாதபுரம், திருப்பத்தூர், திருச்சிராப்பள்ளி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள 7 மறுவாழ்வு முகாம்களில் 1 கோடியே 47 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட 7 தொழிற்கூடங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்து பயனாளிகளிடம் ஒப்படைத்தார்.
முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பான, கௌரவமான மற்றும் மேம்பட்ட வாழ்க்கை வாழ்வதை அரசு உறுதி செய்யும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 10,469 வீடுகள் புதிதாக கட்டித் தரப்படும் என்றும் அறிவித்தார்.
இதற்கமைய, 28 மாவட்டங்களில் உள்ள 69 முகாம்களில் 628 கோடி ரூபாய் மதிப்பில் 10,469 புதிய வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதற்கட்டமாக 19 மாவட்டங்களில் உள்ள 35 முகாம்களில் 186 கோடி ரூபாய் செலவில் 3,510 வீடுகள் கட்டப்பட்டு, அவை ஏற்கனவே திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்டமாக, 19 மாவட்டங்களில் உள்ள 35 முகாம்களில் 236 கோடி ரூபாய் செலவில் 3,959 வீடுகள் கட்ட ஆணைகள் வழங்கப்பட்டன. இதில் 9 மாவட்டங்களில் உள்ள 18 முகாம்களில் கட்டி முடிக்கப்பட்ட 1,904 வீடுகள் ஏற்கனவே பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள 2,055 வீடுகளில், தற்போது திருவள்ளூர் (பெத்திக்குப்பம்), இராணிப்பேட்டை (பானாவரம்), திருப்பத்தூர் (சின்னப்பளிக்குப்பம்), சிவகங்கை (தாயமங்கலம்), சென்னை (புழல்) மற்றும் தென்காசி (ஆத்தியடிபிள்ளையார்கோயில்) ஆகிய 6 முகாம்களில் கட்டப்பட்ட 506 வீடுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
மேலும், முகாம்களில் செயல்படும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் 3 கோடி ரூபாய் செலவில் 10 முகாம்களில் 10 தொழிற்கூடங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. இதில் 3 தொழிற்கூடங்கள் ஏற்கனவே பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 7 மாவட்டங்களில் கட்டப்பட்ட 7 தொழிற்கூடங்களும் திறந்து வைக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ச.மு. நாசர், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.





