புதுடெல்லி, 15 பிப்ரவரி 2026 : இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை முன்னிட்டு, பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவுடன் செய்யப்பட்டுள்ள வர்த்தக ஒப்பந்தம் காரணமாக இந்திய ஜவுளித் தொழிலும், பருத்தி விவசாயிகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ‘எக்ஸ்’ தளப் பதிவில் ராகுல் காந்தி கூறியதாவது:
அமெரிக்காவிற்கு ஆடை ஏற்றுமதி செய்யும் வங்காளதேசத்திற்கு 0% வரிச்சலுகை வழங்கப்படுகிறது. ஆனால், இந்திய ஆடைகளுக்கு 18% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வேறுபாடு குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது, “அதே சலுகையை நாம் விரும்பினால், அமெரிக்காவில் இருந்து பருத்தி இறக்குமதி செய்ய வேண்டும்” என்று மத்திய அமைச்சர் பதிலளித்ததாக அவர் குறிப்பிட்டார்.
இந்த உண்மை ஏன் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை? இது எந்த வகையான கொள்கை? அமெரிக்க பருத்தியை இறக்குமதி செய்தால் இந்திய விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்; இறக்குமதி செய்யாவிட்டால் ஜவுளித் துறை பின்னடைவு அடையும் நிலை உருவாகும். இது ‘முன்னால் கிணறு, பின்னால் பள்ளம்’ என்ற சூழ்நிலையாக உள்ளது என அவர் சாடினார்.
மேலும், வங்காளதேசம் இந்தியாவில் இருந்து பருத்தி இறக்குமதியை குறைக்க அல்லது நிறுத்தும் சிக்னல்கள் தருவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜவுளித் தொழிலும், பருத்தி விவசாயமும் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. இந்த துறைகள் பாதிக்கப்பட்டால், கோடிக்கணக்கான குடும்பங்கள் வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என அவர் எச்சரித்தார்.
தேசிய நலனை கருத்தில் கொண்டு, விவசாயிகளையும் ஏற்றுமதியாளர்களையும் பாதுகாக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிலையில், அதற்கு மாறாக மத்திய அரசு செயல்பட்டுள்ளது என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.





