12 பிப்ரவரி 2026 : மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துகின்றன. சுமார் 30 கோடி தொழிலாளர்கள் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த வேலைநிறுத்தம் குறித்து ஏஐடியூசி பொதுச் செயலாளர் அமர்ஜீத் கவுர் தெரிவித்ததாவது: தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் நாட்டின் நலன்களுக்கு எதிரான கொள்கைகளை மத்திய அரசு முன்னெடுத்து, பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த நாடு தழுவிய போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மின்விநியோகம், காப்பீடு, போக்குவரத்து, சுகாதாரம், கல்வி, எரிவாயு, குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பல துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர். இதனால் தொடர்புடைய சேவைகள் பாதிக்கப்படலாம். குறிப்பாக, காப்பீட்டு துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்ததை எதிர்த்து அந்தத் துறையினரும் வேலைநிறுத்தத்தில் இணைகின்றனர். மேலும், அரசு மற்றும் தனியார் போக்குவரத்து பணியாளர்களும் பெருமளவில் பங்கேற்க உள்ளனர்.
மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் நடத்தும் இந்த வேலைநிறுத்தத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. தொழிற்சங்கங்களின் மற்றும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு நடைபெறும் இந்த போராட்டத்திற்கு திமுக தனது ஆதரவை வழங்குகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஎன்டியூசி, ஏஐடியூசி, ஹெச்எம்எஸ், சிஐடியு, ஏஐயுடியுசி, யுடியுசி உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்கின்றன. நான்கு தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்தல், வரைவு விதை மசோதா மற்றும் மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறுதல், அணுமின் உற்பத்தியில் தனியார் பங்கேற்பை அனுமதிக்கும் திட்டத்தை கைவிடுதல் ஆகியவை தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கைகளாகும்.





