விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: இந்து அமைப்புகளுக்கு 23 நிபந்தனைகள்

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: இந்து அமைப்புகளுக்கு 23 நிபந்தனைகள்

vinayagar

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வருகிற 29-ந் தேதி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகளை வைத்து பிரதிஷ்டை செய்து, பல்வேறு பூஜைகளை நடத்திய பின்னர் அவற்றை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்கும் நிகழ்ச்சிகளும் கடந்த சில ஆண்டுகளாக சென்னை மாநகரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதை முன்னிட்டு, விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வது முதல் அவற்றை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைப்பது வரை மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து இந்து அமைப்புகளுடன் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை செய்யும் கூட்டம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடந்தது.

இந்த கூட்டத்தில், இந்து முன்னணி, பாரத் இந்து முன்னணி, சிவசேனா, விசுவ இந்து பரிஷத், அனுமன் சேனா உள்பட 23 அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டதில் தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் ஆபாஷ்குமார், வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் கருணாசாகர், இணை கமிஷனர்கள் சி.ஸ்ரீதர், ஆர்.திருஞானம், கே.சங்கர், கே.சண்முகவேல் ஆகியோர் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு குறித்து நிபந்தனைகளை கூறினர்.

இதன் பின்னர் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னை மாநகரில் கடந்த ஆண்டு 1862 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த ஆண்டு புதிய சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கு எந்த அனுமதியும் வழங்கப்படாது. மேலும் 3 முதல் 14 அடி வரை மட்டும் சிலை செய்யவேண்டும். அந்த சிலை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புகளின் அடிப்படையிலும், மாசுக்கட்டுப்பாட்டு நிறுவனம் பிறப்பித்துள்ள நிபந்தனைகளின் அடிப்படையிலும், களிமண்ணால் செய்யப்பட்டிருக்கவேண்டும்.

அந்த சிலையில் அடிக்கப்படும் வண்ணத்தில், ரசாயன கலவை இருக்கக்கூடாது. சிலைகள் வைக்கப்படும் இடத்தை சுற்றி நல்ல வெளிச்சம் இருக்கவேண்டும். அடையாளம் தெரியாத வாகனங்கள் அருகே நிறுத்தக்கூடாது. ஒரு சிலைக்கு ஒரு போலீஸ்காரர் என்று பாதுகாப்பு வழங்கப்பட்டாலும், சிலையை பாதுகாக்க 5 பேர் கொண்ட குழுவை விநாயகர் சிலை வைக்கும் இந்து அமைப்பு உருவாக்க வேண்டும். இந்த குழுவை சேர்ந்தவர்கள், போலீஸ்காரருடன் இணைந்து சிலையை பாதுகாக்கும் பணியில் ஈடுபடவேண்டும்.

சிலை ஊர்வலமும், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் புறப்பட வேண்டும், அனுமதிக்கப்பட்ட பாதையில் செல்ல வேண்டும். ஊர்வலத்தின்போது, கலர் சாயப்பொடி தூவவோ, கலர் சாயப்பொடி கலந்த தண்ணீரை பீச்சி அடிக்கவோ கூடாது. மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக கோஷங்களை எழுப்பக்கூடாது. கடலில் 500 மீட்டர் தூரத்துக்குள் சிலையை கரைக்க வேண்டும் என்பது உள்பட 23 நிபந்தனைகளை விதித்துள்ளோம்.