பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைக்காக சுவாமி அய்யப்பன் கோவில் நடைதிறக்கப்பட்டு உள்ளது. நேற்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு சுவாமி அய்யப்பனுக்கு பூஜைகள் நடைபெற்றது.
சுவாமி அய்யப்பனை தரிசிப்பதற்காக அதிகாலையில் இருந்தே சபரி மலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வழக்கமாக ஆவணி மாத பூஜையில் பங்கேற்றுசுவாமி அய்யப்பனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கூட்டத்தை விட 4 மடங்கு அதிக கூட்டம் நேற்று காணப்பட்டது.
இதனால் சன்னிதானத்தில் இருந்து வலியநடை பந்தல் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்து சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்தார்கள். உச்சபூஜையின் போது அய்யப்ப பக்தர்கள் சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்ய முண்டியடித்ததால் சன்னிதானத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
வழக்கமாக 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். ஆனால் நேற்று 75 போலீசார் மட்டுமே பணியில் இருந்ததால் அவர்களால் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி அய்யப்ப பக்தர்கள் அவதிப்படும் சூழ்நிலை நிலவியது. நேற்று ஏராளமான வெளி மாநில பக்தர்கள் இருமுடி கட்டி வந்து சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்து சென்றனர். நேற்று சுவாமி அய்யப்பனுக்கு லட்சார்ச்சனை, சகஸ்ர கலசபூஜை, படிப்பூஜைகள் நடைபெற்றது.
சுவாமி அய்யப்பன் கோவிலுக்கு வருடத்திற்கு ஒருமுறை தந்திரி தேர்வு நடைபெறும். இந்த ஆண்டுக்கான புதிய தந்திரியாக கண்டரரு ராஜீவரு தேர்வு செய்யப்பட்டார். அவர் நேற்று முதல் சுவாமி அய்யப்பனுக்கு பூஜைகளை நடத்த தொடங்கினார். அவர் ஒரு வருடத்திற்கு தந்திரியாக பதவி வகிப்பார்.