முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் இன்று பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தலைமைத்துவத்திற்குத் தாம் இதுவரை வழங்கி வந்த ஆதரவை மீட்டுக் கொள்வதாக அறிவித்தார்.
‘அவரது தலைமைத்துவம் மீதான கருத்துக்களை அவரிடம் நேரிடையாகவே தெரிவித்து விட்டேன். அவரது தலைமைத்துவத்திற்கான ஆதரவை மீட்டுக்கொள்வதிலிருந்து எனக்கு வேறு வழியில்லை. நான் சொன்ன எந்த கருத்தும் பயனளிக்க வில்லை, எனவே தான் நான் விமர்சிக்கிறேன். எனக்குப் பின் பொறுப்பேற்ற துன் அப்துல்லா படாவி நஜிப்பை விட மேலானவர்’ என துன் டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.
‘டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் கடந்த பொதுத்தேர்தலில் மிகவும் மோசமான முடிவுகளைப் பெற்றது மூலம் நல்ல பாடம் பெற்றிருப்பார் என நினைத்தேன். ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை’.
பிரதமர் நஜீப் துன் ரசாக் தலைமைத்துவத்தின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இனங்களுக்கிடையேயான நல்லுறவை பாதித்ததோடு நாட்டின் பொருளாதாரத்தையும் பாதித்தது என்றார் அவர்.
அவருடைய தலைமைத்துவத்தை விமர்சிக்க வேறு யாரும் முன்வராவிட்டால், அதனைத் தாமே விமர்சிக்க விரும்புவதாக மலேசியாவின் நீண்டகாலப் பிரதமருமான துன் டாக்டர் மகாதீர் சாடினார்.
‘இதே போன்று நான் முன்பு துன் அப்துல்லாவையும், நாட்டின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானையும் விமர்சித்துள்ளேன். இதற்குக் காரணம் நான் என் தலைவர்களை நேசிக்கவில்லை. ஆனால் அதைவிட எனது மக்களையும், நாட்டையும் பெரிதும் நேசிக்கிறேன் என அவர் தெரிவித்தார்.
நாட்டின் சீர்திருத்தத்தை முன்வைக்கும் இயக்கம் ஒன்று முன்வைத்ததை ஏற்று ISA எனப்படும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம், மற்றும் வீட்டுக்காவல் சட்டத்தை ரத்து செய்தது முதல் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவுக்கும் உட்பூசல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
‘இது எதிர்க்கட்சியினரைக் குறைக்க வில்லை. மாறாக, பல குண்டர் கும்பல் தலைவர்கள் வெளியே வந்ததால் குற்றங்கள் நாட்டில் அதிகரிக்கத் தொடங்கியது.
நஜிப் அன்டை நாடுகளின் கருத்துகளையும் விமர்சனங்களையும் தாழ்மையுடன் ஏற்கிறார். ஆனால் இதுவரை தமக்கு ஆதரவளித்து வந்த இனத்திற்கும் கட்சிகளுக்கும் நியாயமாக நடந்துகொள்ளவில்லை.
ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும் போதெல்லாம் மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்காகப் நஜிப் அரசாங்கத்தின் பணத்தைப் பயன்படுத்துகிறார். இதனால் உழைப்பைப் போடும் தன்மை மறைந்து போகிறது. உழைப்பில்லாமல் அன்பளிப்பாகப் பணம் கொடுப்பதால் நாடு ஒருபோதும் மேம்பாடு அடையாது என பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் BRIM உதவித் தொகையை மேற்கோள் காட்டி துன் டாக்டர் மகாதீர் இவ்வாறு தெரிவித்தார்.