இந்தியாவின் 68-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் நாளை முதன்முதலாக பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியினை ஏற்றி வைத்து சுதந்திர தின சிறப்புரை நிகழ்த்தவுள்ளார்.
இந்நிகழ்ச்சியை 10 ஆயிரம் பொதுமக்கள் நேரில் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர மத்திய மந்திரிகள், எம்.பி.க்கள் அரசுத் துறைகளின் உயரதிகாரிகள் மற்றும் நாட்டின் பல்துறை பிரபலங்களும் இவ்விழாவில் பங்கேற்கவுள்ளனர்.
முப்படைகளின் அணிவகுப்புடன் நடைபெறும் சுதந்திர தின விழாவின்போது விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்வதை தவிர்க்கும் வகையில் டெல்லி முழுவதும் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கொடியேற்று விழா நடைபெறும் செங்கோட்டையை சுற்றிலும் 200 சி.சி.டி.வி. கேமராக்களும், அதன் அருகாமை பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களையும் பொருத்தியுள்ள டெல்லி போலீசார், அவற்றில் பதிவாகும் காட்சிகளை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.
செங்கோட்டை, மற்றும் சுற்றுப்புறங்களில் டெல்லி போலீசார், சிறப்பு பாதுகாப்பு படையினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட சுமார் 10 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதமர் பேசும் மேடையை சுற்றிலும் குறி தவறாமல் துப்பாக்கியால் சுடும் கலையில் கைதேர்ந்த கமாண்டோ படையினர் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தனது வீட்டில் இருந்து மகாத்மா காந்தியின் சமாதி அமைந்துள்ள ராஜ்காட்டுக்கு மலரஞ்சலி செலுத்த பிரதமர் வரும் பாதையிலும், செங்கோட்டைக்கு செல்லும் சாலைகளிலும் தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டு, அவ்வழியே செல்லும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
நகரின் முக்கியமான பகுதிகளில் ’ஸ்வாட்’ மற்றும் ‘வஜ்ரா படை’யினரும், வெடிகுண்டு நிபுணர்களும் மோப்ப நாய்களுடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், டெல்லியில் உள்ள அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் மார்க்கெட் பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.