ஈராக்கின் சில நகரங்களை கைப்பற்றி தங்கள் வசமாக்கிக் கொண்ட ஐ.எஸ். எனப்படும் இஸ்லாமிய ஜிஹாதி போராளிகள் அப்பகுதியில் பேராதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
மோசூல் நகரின் பல இடங்களில் உள்ள கிருஸ்துவ தேவாலயங்களை இடித்து தரைமட்டமாக்கிய ஜிஹாதிகள், அப்பகுதியில் வசித்த கிருஸ்தவர்ளை ஊரை விட்டே விரட்டியடித்ததுடன், அப்பகுதியில் வாழும் முஸ்லிம் பெண்களின் மீதும் மதக் கட்டளை என்ற பெயரில் பெண்ணுறுப்பை சிதைத்தல் உள்பட ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்து அட்டூழியம் செய்துக் கொண்டுள்ளனர்.
உயிருக்கு அஞ்சியும், ஜிஹாதிகளால் ஊரை விட்டு விரட்டப்பட்டும் மலை உச்சிகளில் தஞ்சமடைந்து, குடிக்க நீரின்றியும், உண்ன உணவின்றியும் தவித்து வருகின்றனர்.
அந்த மக்களுக்கு உடனடித் தேவையான அத்தியாவசிய பொருட்களை சப்ளை செய்யும்படியும், அதை தடுத்து நிறுத்த ஜிஹாதிகள் முயற்சித்தால் அவர்கள் மீது விமான தாக்குதலை நடத்துமாறு அமெரிக்க படைகளுக்கு அந்நாட்டின் அதிபர் பராக் ஒபாமா உத்தரவிட்டார். இதற்கு அமெரிக்காவின் நேச நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதனையடுத்து, 2 போர் விமானங்களின் பாதுகாப்புடன் சிஞ்சார் மலைப்பகுதியில் தஞ்சம் அடைந்துள்ள மக்களுக்கான நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற 3 அமெரிக்க விமானங்கள் 28 ஆயிரம் மக்களுக்கான உணவு, சுமார் 5 ஆயிரம் லிட்டர் குடிநீர் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை மலைப்பகுதியில் போட்டு விட்டு வெற்றிகரமாக திரும்பியதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்ட்டகான் அறிவித்தது.
எங்கள் படைகளை அச்சுறுத்தினால் ஐ.எஸ். போராளிகள் மீது தாக்குதல் தொடரும் என்று பென்டகன் செய்தி தொடர்பாளர் எச்சரித்தார்.
எந்த நேரத்தில் ஐ.எஸ். ஜிஹாதிகள் வந்து கொன்று விடுவார்களோ? என்ற உயிர் பயத்துடன் ஆபத்தான அந்த மலைப்பகுதியில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் மக்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான வழிவகைகளை ஆராயுமாறு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உத்தரவிட்டதன் பேரில் அவர்களை காப்பாற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி சிஞ்சார் மலைப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த 130 ஆலோசகர்கள் ஈராக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஆபத்தான சிஞ்சார் மலையில் இருந்து தரைப்பகுதிக்கு சாய்தள பாதை அமைத்து மக்களை வெளியேற்றுவதா? அல்லது, ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் அவர்களை ஏற்றி வருவதா? என்பது தொடர்பாக அவர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.
அதனையடுத்து, மலைப்பகுதியில் தஞ்சமடைந்துள்ள மக்களை பாதுகாப்புடன் அழைத்து வருவதற்கான நடவடிக்கைக்கு ஒபாமா உத்தரவிடுவார். அவர்களை மீட்கும் பணியில் குர்திஷ் படைகளுக்கு அமெரிக்க ராணுவம் துணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.