என் தமிழ்

பேராக் இந்தியப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டுறவுக் கழக உறுப்பினர்களுக்கு லாப ஈவு அதிகரிப்பு

கோப்பேங், 04/05/2025 : கடந்த 1964-ஆம் ஆண்டு தொடங்கி செயல்பட்டு வரும் பேராக் மாநில இந்தியப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டுறவுக் கழகம் அதன் உறுப்பினர்களின் வளர்ச்சிக்காக சிறந்த முறையில் செயலாற்றி வருகிறது.

அதனை மேலும் வலுவூட்டும் விதமாக, இவ்வாண்டு அதன் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் லாப ஈவு மூன்று விழுக்காடாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அக்கூட்டுறவுக் கழகத்தின் தலைவர் சி. விஜயன் கூறினார்.

1,293 உறுப்பினர்களைக் கொண்டு செயல்படும் இந்தக் கூட்டுறவுக் கழகத்தில் கடந்தாண்டு வழங்கப்பட்ட லாப ஈவு 1.9 விழுக்காடாக இருந்த நிலையில், தற்போது மூன்று விழுக்காடாக உயர்ந்திருப்பது மகிழ்ச்சி தருவதாக சி. விஜயன் தெரிவித்தார்.

“அதோடு, சுமார் 20 லட்சம் ரிங்கிட்டாக இருந்த சொத்துடைமை தற்போது 90 லட்சம் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது. இந்த சொத்துடைமை முழுவதும் வாரியக் குழு உறுப்பினர்களின் முயற்சியில் வாங்கப்பட்டு இன்று நமது கழக உறுப்பினர்களுக்கு லாபத்தைத் தேடிக் கொடுக்கின்றது” என்றார் அவர்.

கழக உறுப்பினர்களின் தேவைகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில கடன் உதவி வழங்கும் இக்கூட்டுறவுக் கழகம் முதலீடுகளில் கவனம் செலுத்தி லாபத்தை ஈட்டு வருவதாக அவர் மேலும் விவரித்தார்.

இதனிடையே, இக்கூட்டுறவு கழகம் ஜெலப்பாங், கேமரன் மலை, சிம்பாங் பூலாய் கெந்திங் மலை உட்பட ஒன்பது இடங்களில சொந்த கட்டிடங்களை வைத்துள்ள வேளையில் அதன் வருமானம் உறுப்பினர்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

இன்று, பேராக், கோப்பேங்கில் உள்ள ஆர்.டி.சி மண்டபத்தில் இந்தக் கூட்டுறவுக் கழகத்தின் 61-வது பொதுக் கூட்டமும் வாரியக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடைபெற்றன.

Source : Bernama

#Perak
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

Scroll to Top