உலகம்மலேசியா

பெர்டானா புத்ரா வளாகத்தில் கொசொவோ அதிபருக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு

புத்ராஜெயா, 02/05/2025 : மலேசியாவிற்கு நான்கு நாள்கள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டிருக்கும் கொசொவோ அதிபர், டாக்டர் ஜோசா ஒஸ்மானி சத்ரியுவுக்கு, இன்று புத்ராஜெயா, பெர்டானா புத்ரா வளாகத்தில் அதிகாரப்பூர்வ வரவேற்பு நல்கப்பட்டது.

காலை மணி 9க்கு வந்த டாக்டர் ஜோசா ஒஸ்மானி சத்ரியுவைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்ற பின்னர், இரு நாடுகளின் தேசிய கீதங்கள் ஒலிக்கப்பட்டன.

மேஜர் முஹமட் பிக்ரி செனான் தலைமையிலான அரச மலேசிய இராணுவப் படையின் முதல் பெட்டாலியனின் மூன்று அதிகாரிகள் உட்பட 103 உறுப்பினர்களின் மரியாதை அணிவகுப்பையும் ஒஸ்மானி பார்வையிட்டார்.

துணைப் பிரதமர்கள் டத்தோ ஶ்ரீ டாக்டர் முஹமட் சாஹிட் ஹமிடி மற்றும் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோப், அமைச்சரவை உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதர்கள், அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அன்வாருடன் சந்திப்பு நடத்துவதற்கு முன்னதாக, வருகையாளர்கள் புத்தகத்தில் ஒஸ்மானி கையெழுத்திட்டார்.

2008-ஆம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி, கொசொவோவை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து, அவ்வாறு செய்த முதல் ஆசிய நாடாக மலேசியா விளங்கியது.

கடந்த 2011-ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவுகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியன.

கடந்தாண்டு கொசொவோ குடியரசுக்கான மலேசியாவின் ஏற்றுமதி இரண்டு கோடியே 59 லட்சத்து 20 ஆயிரம் ரிங்கிட் மற்றும் இறக்குமதி 26 லட்சத்து 30 ஆயிரம் ரிங்கிட்டை உட்படுத்தி, இரு நாடுகளின் வர்த்தக மதிப்பு இரண்டு கோடியே 85 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட்டாக பதிவானது.

Source : Bernama

#KosovoMalaysia
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews