ரவாங், 18/04/2025 : சிலாங்கூர், சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம் குறித்த முதற்கட்ட அறிக்கை, ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அலட்சியம் அல்லது மோசடி அடிப்படையில் தமது தரப்பு விசாரணையைத் தொடர்ந்து வரும் நிலையில், வேலைப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையும் விசாரணையை மேற்கொண்டு வருவதாக, சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் கூறினார்.
“எனவே, இன்னும் ஒருவாரம் காத்திருப்போம். நாங்கள் சம்பவ இடம் தொடர்பான முதற்கட்ட அறிக்கையையும் தகவல்களையும் வெளியிடுவோம். தொடங்கி விட்டோம், முடியும் தருவாயில் உள்ளது. வெடிப்பு ஏற்பட்ட எரிவாயு குழாயை நாங்கள் கண்டறிந்து விட்டோம். எனவே, போலீசின் தடயவியல் பிரிவும் DOSH-யின் தடயவியல் பிரிவும் தீயணைப்பு துறையின் தடயவியல் பிரிடவுடன் இணைந்து, சோதனை நடத்தி வருகின்றனர்”, என்றார் அவர்.
இன்று, சிலாங்கூர் இளவரசர் தெங்கு அமிர் ஷா சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா பண்டார் கண்டிரி ஹோம்ஸ் போலீஸ் நிலையத்தைத் திறந்து வைத்த நிகழ்ச்சிக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், டத்தோ ஹுசேன் அதனை கூறினார்.
இம்மாதம் முதலாம் தேதி, நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் 30 மீட்டர் உயரம் வரை எழுந்த தீயின் வெப்பநிலை 1,000 பாகை செல்சியஸ் வரை பதிவு செய்யப்பட்ட நிலையில், சுமார் எட்டு மணி நேரங்களுக்குப் பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டது.
Source : Bernama
#PetronasGasPipelineAccident
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews