இசையமைப்பாளராகத் துடிக்கும் ஸ்ரீசாந்த்

இசையமைப்பாளராகத் துடிக்கும் ஸ்ரீசாந்த்
srre_1463640f
கேரளாவைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஸ்ரீசாந்த் ஐபிஎல் சூதாட்டக் குற்றச்சாட்டில் சிக்கி, வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்டவர். சமீபத்தில் ஹிந்தித் தொலைக்காட்சி ஒன்றில் நடனப் போட்டியில் கூட கலந்து கொண்டார். இனி, தன்னால் கிரிக்கெட் விளையாட முடியாது என்பதால் அவருக்குப் பிடித்தமான வேறு ஒரு பணியில் ஈடுபட முடிவெடுத்துள்ளார் என்கிறார்கள். அடிப்படையிலேயே இசையார்வமும், நடனத்தின் மீது ஆர்வம் கொண்டவரான ஸ்ரீசாந்த் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘அன்புள்ள அழகே’ என்ற படத்துக்கு இசையமைத்து சிறு கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பே இப்படத்திற்கு ஸ்ரீசாந்த் இசையமைப்பது பற்றி செய்தி வெளியானது. அந்தப் படத்திற்கு அவர் ஏழு பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறாராம்.

மலையாளத்திலும் ‘மழவில்லினாட்டம் வரே’ என்ற படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். இருந்தாலும் நடிப்பில் அவருக்கு ஆர்வம் இல்லையாம். திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கொடுத்தால் தன்னால் சிறப்பாக இசையமைக்க முடியும் என்று சொல்லி வருகிறாராம். தற்போது தெலுங்குப் படங்களுக்கும் இசையமைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். தெலுங்குத் திரையுலகின் பிரபலங்களான தயாரிப்பாளர் சுரேஷ் பாபு, இயக்குனர்கள் பூரி ஜெகன்னாத், குணசேகர் ஆகியோரைச் சந்தித்து அவர்களுடைய அடுத்த படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பைக் கேட்டிருக்கிறாராம். அவர்களில் யாராவது ஒருவர் வாய்ப்புக் கொடுத்தாலும் தெலுங்குத் திரையுலகில் ஜொலித்துவிடலாம் என நம்புகிறாராம்.