எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் கும்பலை பி.டி.ஆர்.எம் முறியடித்தது

எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் கும்பலை பி.டி.ஆர்.எம் முறியடித்தது

கோலாலம்பூர், 04/04/2025 : மார்ச் 27ஆம் தேதி, சிலாங்கூரில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் ஒரு கோடியே 60 லட்சம் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புடைய மெத்தாம்ஃபெதாமின் வகை போதைப் பொருளை கைப்பற்றி எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் கும்பலை அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம் முறியடித்துள்ளது.

சுபாங் ஜெயாவில் வாகனம் ஒன்றை ஓட்டி வந்த இரண்டு உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, இச்சோதனை நடவடிக்கை தொடங்கியதாக புக்கிட் அமான் போதைப் பொருள் குற்றப்புலனாய்வுத் துறை, ஜே.எஸ்.ஜே.என் இடைக்கால இயக்குநர், டிசிபி மாட் சானி@முஹமட் சலாஹுடின் சே அலி தெரிவித்தார்.

”வாகனத்தின் உள்ளே நடத்தப்பட்ட சோதனையில், மெத்தாம்ஃபெதாமின் அல்லது சாபூ வகை போதைப் பொருள் அடங்கிய 150 பொட்டலங்களைக் கண்டெடுத்தோம். அனைத்து போதைப் பொருளும் சாக்குகளில் நிரம்பப்பட்டிருந்தன. இந்த முதல் சோதனையில் 156 கிலோகிராம் எடையிலான போதைப் பொருள் என மதிப்பிடப்பட்டுள்ளது”, என்று அவர் கூறினார்.

அதன் பின்னர், போதைப் பொருளைச் சேமித்து வைக்க அதே பகுதியில் உள்ள வாடகை வீட்டை போலீசார் சோதனை செய்து 312 கிலோ எடையுள்ள 300 போதைப் பொருள் பொட்டலங்கள் கொண்ட 12 சாக்குகளைப் பறிமுதல் செய்ததாக மாட் சானி கூறினார்.

இதனிடையே, பிற்பகல் மணி ஒன்றுக்கு அம்பாங், தாமான் புக்கிட் பெர்மாயில் உள்ள கிடங்கில் மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது சோதனையில் 51 கிலோ எடையுள்ள போதைப் பொருள் அடங்கிய இரண்டு சாக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன.

கடந்த ஆண்டு செப்டம்பர் தொடங்கி அக்கும்பல் தின வாடகைக்குத் தங்கும் வீடுகளில் போதைப் பொருளைச் சேமித்து வைத்து, உள்நாடு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் விநியோகித்ததாக நம்பப்படுகிறது.

1952-ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டம் செக்‌ஷன் 39B-யின், அவ்விருவரும் மார்ச் 28 தொடங்கி ஏப்ரல் ஏழாம் தேதி வரையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக மாட் சானி தெரிவித்தார்.

Source : Bernama

#PDRM
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews