நோன்பு பெருநாளின் குதூகலத்தில் நிறைந்திருந்த ரஹ்மாதுல் நிசாவின் வீடு

நோன்பு பெருநாளின் குதூகலத்தில் நிறைந்திருந்த ரஹ்மாதுல் நிசாவின் வீடு

செராஸ், 31/03/2025 : புனித ரமலான் மாதம் நிறைவடைந்து ஷவால் முதல் நாளில் இஸ்லாமிய அன்பர்கள் தங்களின் ஈகைத் திருநாளை உலகெங்கும் குதூகலமாகக் கொண்டாடுகின்றனர்.

அன்பினை பகிரும் பெருநாள்களில் ஒன்றான இந்நாளை, நாட்டில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி இதர இனத்தவர்களும் ஒன்றிணைந்து ஒற்றுமையாய் கொண்டாடுவது வழக்கம்.

அந்த மகிழ்ச்சியும் குதூகலமும் நிறைந்திருந்த ஓர் அழகிய குடும்பத்தின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம் குறித்த சிறப்பு செய்தி தொடர்ந்து இடம்பெறுகின்றது.

கோலாலம்பூர், செராஸில் வசிக்கும் ரஹ்மாதுல் நிசா புனிஸ்தா அப்துல்லாவின் குடும்பத்தினர், பெருநாள் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியிருந்தனர்.

பெருநாளை வரவேற்கும் விதமாக ஆறு வகையான பலகாரங்களைத் தயார் செய்து வைத்திருந்த நிலையில், புத்தாடை புன்சிரிப்போடு தொழுகையை முடித்து தங்களின் கொண்டாத்தைத் தொடங்கினர்.

பிள்ளைகளோடு பெருநாள் கொண்டாடுவதே தமக்கு பெரும் மகிழ்ச்சி என்றாலும், கணவன் உடன் இல்லாதது சிறு குறையாக இருப்பதாக குடும்ப தலைவி ரஹ்மாதுல் நிசா கூறினார்.

“ஒவ்வொரு வருடமும் என்னுடைய பிள்ளைகள், தங்கையின் குடும்பத்தை மட்டும்தான் நாங்கள் நோன்பு பெருநாளுக்கு அழைப்போம். இம்முறை நண்பர்கள், இன்னும் பல உறவினர்களை நாம் அழைத்திருக்கின்றோம். மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது. என்ன குறையாக இருக்கின்றது என்றால் என்னுடைய கணவர் இல்லை. அவர் கிராமத்திற்குச் சென்றிருக்கின்றார். அந்த ஒரு வருத்தம் தான், மற்றபடி இந்த வருடம் மிகவும் சிறப்பாக இருக்கின்றது”, என்று ரஹ்மாதுல் நிசா புனிஸ்தா அப்துல்லா கூறினார்.

நோன்பு பெருநாளின் போது பல்வேறு விதமான பலகாரங்கள் தயார் செய்து வைத்திருந்தாலும் கூட முறுக்கு மற்றும் அச்சு முறுக்கிற்கே முக்கியத்துவம் வழங்கப்படுவதாக ரஹ்மாதுல் நிசா கூறினார்.

இனம் பாராமல் கொண்டாடப்படும் இப்பெருநாள் ஒரே மலேசியர் என்ற பற்றுதலைப் பரைசாற்றும் விதமாக அமைவதாக, ரஹ்மாதுல் நிசாவின் மகள்களும் மருமகன்களும் தெரிவித்தனர்.

“நோன்பு பெருநாள் ஒரு மாதத்திற்கு இருக்கும். ஆக, இன்றைக்கு அம்மா வீட்டில். இன்று அல்லது நாளைக்குக் கணவனின் கிராமத்திற்குச் சென்று விடுவோம். பேராக்கில். மறுபடியும், சித்தி எங்களுக்கு சமைத்து கொடுப்பார். என்னை பார்த்தால் நான் கலப்பு திருமணம் செய்துக் கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஒவ்வொரு இனத்தின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் வேறுபாட்டைப் பார்க்க முடிகின்றது. என்னை போல் நான் மலாய்க்காரர் அவர் இந்தியர்”, என்று முஹமட் சக்கிர் அப்துல் ஹமிட் மற்றும் அர்ஸினா அஹ்மாட் தம்பதியர் கூறினர்.

“இல்லை உங்கள் முகத்தைப் பார்ப்பதற்கு இந்தியர் போல் இல்லை என்று நிறைய பேர் கேட்டிருக்கின்றனர். என்னுடைய கணவருடைய குடும்பத்திலும் கூட வணக்கம் என்று கூறி என்னிடம் மிகவும் அன்பாக நடத்துக் கொள்வார்கள்”, என்று நோர் முஹமட் ஹஃபிசுடின் ஷம்சுடின் மற்றும் சுலையா அஹ்மாட் தம்பதியர் கூறினர்.

பெருநாள் காலங்களில் நடத்தப்படும் இதுபோன்ற பொது உபசரிப்புகள் ஒற்றுமையையும் மகிழ்ச்சியையும் மேலும் அதிகரிக்கச் செய்வதாக, அவர்கள் கூறினர்.

வீட்டிற்கு வருகைப் புரிந்த உறவினர்களும் நண்பர்களும் ஒருவருக்கொருவருடன் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

“நாம் கிராமத்தில் இருக்கின்ற போது அண்டை வீட்டுக்காரர்கள் அனைவரும் மலாய்காரர்கள், அவர்களுடன் நோன்பு பெருநாள் கொண்டாடிய தருணங்களுக்கு நான் மிகவும் ஏங்கியிருப்போம். ஆக, இப்பொழுது அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது”, என்று தவமணி மணியம் கூறினார்.

அன்பாலே அழகாகும் வீடு என்பதற்கேற்ப ரஹ்மாதுல் நிசாவின் வீடு இன்று சொந்த பந்தங்களாலும் அன்பாலும் நிறைந்து காணப்பட்டது.

Source : Bernama

#Ramadan
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews