கோலாலம்பூர், 30/03/2025 : ஜாலான் துங்கு அப்துல் ரஹ்மானில், கடந்த வெள்ளிக்கிழமை பலூன் வியாபாரி ஒருவருடன் சண்டையில் ஈடுபட்ட கோலாம்பூர் மாநகராண்மைக் கழகம், டிபிகேஎல்லை சேர்ந்த மூன்று அமலாக்க உறுப்பினர்களுக்கு தற்காலிக பணி ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
டிபிகேஎல் மற்றும் அரச மலேசிய போலீஸ் படையின் விசாரணை, எந்தவொரு தலையீடுமின்றி, வெளிப்படையாகவும் முழுமையாகவும் நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோலாக டிபிகேஎல்லின் டத்தோ பண்டார் டத்தோ ஶ்ரீ டாக்டர் மைமுனா முஹமட் ஷரிப் தெரிவித்தார்.
அந்த முடிவு குறித்து கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சலிஹா முஸ்தாஃபாவுடன் கலந்துரையாடப்பட்டு விட்டதாக டத்தோ ஶ்ரீ டாக்டர் மைமுனா இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட விவகாரத்தை டிபிகேஎல் கடுமையாகக் கருதுவதோடு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் நேர்மை நெறிக்கும் பொது நம்பிக்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்திய அக்குற்றச்செயலில் சமரசம் காணாது என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து தரப்பினரின் ஒருமைப்பாடு, பொறுப்பு மற்றும் நீதி என்ற கொள்கையின் அடிப்படையில் தனது நிர்வாகத்தை நிலைநிறுத்துவதற்கு டிபிகேஎல் உறுதி கொண்டுள்ளது.
முழுமையான விசாரணை நிறைவடைந்தப் பின்னர், எந்தவொரு முடிவும் எடுக்கப்படும் என்று டாக்டர் மைமுனா கூறினார்.
அமலாக்க உறுப்பினர்களுடனான மோதல் தொடர்புடைய அக்காணொளி சமூக வலைத்தளத்தில் பரவலாகப் பகிரப்பட்டு பொது மக்களின் பல்வேறு விமர்சனத்திற்கு ஆளானது.
பலூன் வியாபாரியான 28 வயதுடைய முஹமட் சயிமுடின் அஸ்லான் பொது மருத்துவமனை ஒன்றில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
Source : Bernama
#DBKL
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews