ஈப்போ, 30/03/2025 : நோன்பு பெருநாளை முன்னிட்டு, நேற்று தொடங்கி அமல்படுத்தப்பட்ட கனரக வாகனங்கள் சாலையில் பயணிக்கும் தடையை மீறிய 21 கனரக வாகனங்களைச் சாலைப் போக்குவரத்துத் துறை, ஜேபிஜே பறிமுதல் செய்துள்ளது.
அமலாக்கத்தின் முதல் நாளில், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் 62 கனரக வாகனங்கள் தடையை மீறியிருப்பது கண்டறியப்பட்டதாக, ஜேபிஜே தலைமை இயக்குநர், டத்தோ ஏடி ஃபட்லி ரம்லி தெரிவித்தார்.
போக்குவரத்து அமைச்சு, முன்னதாக அறிவித்த விதிமுறைகளின் படி கனரக வாகனங்களின் மீது ஜேபிஜே சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாக, ஏடி ஃபட்லி கூறினார்.
“நாங்கள் 21 சம்மன் அறிவிக்கைகளை வெளியாக்கினோம். அதோடு, 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்து சட்டம் செக்ஷன் 59-இன் கீழ் 21 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 2025-ஆம் ஆண்டு கனரக வாகனங்களைச் செலுத்தும் தடையின் கீழ் சாலை போக்குவரத்து விதிகளைப் பின்பற்ற தவறும் உரிமையாளர் அல்லது ஓட்டுனருக்கு 300 ரிங்கிட் அபராதம் அல்லது நீதிமன்றத்தில் 2,000 ரிங்கிட்டிற்கும் மேற்போகாத அபராதம் அல்லது ஆறு மாதங்களுக்கு மேற்போகாத சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்”, என்று அவர் கூறினார்.
நேற்று, பேராக், ஈப்போ, அமான் ஜெயா பேருந்து நிலையத்தில் 2025-ஆம் ஆண்டிற்கான நோன்பு பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பேருந்துகளைக் கண்காணிப்பு மற்றும் சேதனை நடவடிக்கையை மேற்கொண்ட பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அதனை கூறினார்.
Source : Bernama
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews