ஸ்தாப்பாக், 30/03/2025 : நாட்டிலுள்ள பல்லின சமூகத்தினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகளையோ அல்லது விமர்சனங்களையோ வெளியிடுவதை விடுத்து, எவ்வேளையிலும் விழிப்புணர்வோடு இருக்குமாறு அனைத்து தரப்பினரும் வலியுறுத்தப்படுகிறார்கள்.
ஒவ்வொரு கண்ணோட்டமும் உண்மைகளின் அடிப்படையில் முதலில் உறுதிப்படுத்தப்பட வேண்டுமே தவிர வேண்டுமென்றே பரப்புதல் கூடாது என்று மக்களவைத் தலைவர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் தெரிவித்தார்.
”ஒரு சிலர் கருத்து தெரிவிக்கும் போது அவர்களுக்கே அப்பிரச்சினையின் வேர் கூடத் தெரிந்திருக்காது. ஆனால், கருத்து தெரிவிப்பார்கள். எப்போதும் கருத்துகளை வெளியிடுபவர்களுக்கு அதன் பின்னணி தெரியாது என்பதை நான் உணர்கிறேன். இவ்வாறு நாம் நடந்து கொண்டால், அது மிகவும் ஆபத்தானது. எனவே, உங்களுக்கும் சமூகத்திற்கும் நியாயமாக இருங்கள். முதலில் உண்மைகளைச் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்”, என்று அவர் கூறினார்.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு கோலாலம்பூரில் வசிக்கும் 3,333 வசதி குறைந்தவர்களுக்கு மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கம் பிரெஸ்மா, ஸ்தாப்பாக்கில் ஏற்பாடு செய்திருந்த அரிசி உதவித் திட்டத்தில் கலந்து கொண்ட டான் ஶ்ரீ ஜொஹாரி அவ்வாறு கூறினார்.
இதனிடையே, 1994ஆம் ஆண்டு முதல் நோன்புப் பெருநாளின் போது இத்தகைய உதவித் திட்டங்கள் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரெஸ்மாவின் தலைவர் டத்தோ ஜவஹர் அலி தைப் கான் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள பல உணவக உரிமையாளர் உட்பட பிரெஸ்மாவின் 14,000 உறுப்பினர்கள் இணைந்து வழங்கும் நிதியைக் கொண்டு ஆண்டுதோறும் இத்திட்டத்தை மேற்கொள்ள முடிவதை அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் மடானி கொள்கையில் வழங்கப்படும் இந்த உதவித் திட்டத்தில் இஸ்லாமியர்ளைத் தவிர்த்து இந்தியர்கள், சீனர்கள், சீக்கியர்கள் என்று பலரும் இணைந்து பயனடைவது குறித்து ஜவஹர் அலி மகிழ்ச்சி தெரிவித்தார்.
Source : Bernama
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews