கோலாலம்பூரில் ஆறு கடைகள் தீக்கிரையாகின

கோலாலம்பூரில் ஆறு கடைகள் தீக்கிரையாகின

ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷா, 29/03/2025 : கோலாலம்பூர், ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷாவில், இன்று நண்பகல் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் ஆறு கடைகள் தீக்கிரையாகின.

இச்சம்பவம் குறித்து தீயணைப்புப் படை தரப்புக்குப் பிற்பகல் மணி1.36 அளவில் அவசர அழைப்பு கிடைத்த வேளையில், செந்தூல், ஹங் துவா, தித்திவங்சா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 35 தீயணைப்பு உறுப்பினர்களும் தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

சம்பவ இடத்தைச் சென்றடைந்ததும், 350 சதுர மீட்டர் பரப்பளவிலான வன்பொருள் கடை 100 விழுக்காடு சேதமடைந்தது தெரிய வந்ததாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நடவடிக்கை மையம் குறிப்பிட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட வன்பொருள் கடைக்குப் பின்புறம் இருந்த ஆறு உணவகங்களும் இத்தீச்சம்பவத்தில் சேதமடைந்தன.

இந்நிலையில், தாம் சந்தையில் இருந்து வீடு திரும்பியபோது, சம்பவ இடத்தில் அடர்ந்த புகை வெளியேறுவதைக் கண்டு, தீயணைப்புப் படைக்கு அவசர அழைப்பைச் செய்வததாக சம்பவத்தை நேரில் கண்ட சல்மா என்பவர் தெரிவித்தார்.

“நான் சந்தையில் இருந்து வீடு திரும்பியபோது அடர்ந்த புகை வெளியேறுவதைக் கண்டேன். அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். நான் 999 எண்ணுக்கு அழைத்தேன். கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அருகில் தீப்பற்றி இருப்பதாக தெரிவித்தேன். ஐந்து நிமிடத்தில் தீயணைப்புப் படையினர் அங்கு வந்தனர். இச்சம்பவத்தில் யாரும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடாது என்று நான் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்”, என்று அவர் கூறினார்.

அங்கு வேலைக்கு வருகை புரிந்தபோது சம்பந்தப்பட்ட உணவகத்தில் தீப்பிடித்தது குறித்து அதன் முதலாளி தம்மிடம் தெரிவித்ததாக அங்குள்ள உணவகம் ஒன்றில் பணிபுரியும் லின்சன் கூறினார்.

“பொருட்களைப் பாதுகாப்பாக மீட்க முடிந்ததா? பாதுகாப்பாக உள்ளன. நான் நண்பகல் 1 மணிக்கு வேலைக்கு வந்தபோது முதலாளி கடை தீப்பிடித்ததாகக் கூறினார். காரணம் தெரியவில்லை”, என்றார் அவர்.

தீயணைப்புப் படையினர் பிற்பகல் 2.50 மணியளவில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நிலையில், இதில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

தீச்சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Source : Bernama

#FireAccident
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews