இறுதிக்கட்ட விற்பனையில் களைக்கட்டியிருக்கும் ஜாலான் மஸ்ஜிட் இந்தியா

இறுதிக்கட்ட விற்பனையில் களைக்கட்டியிருக்கும் ஜாலான் மஸ்ஜிட் இந்தியா

ஜாலான் மஸ்ஜிட் இந்தியா, 29/03/2025 : நாளை மறுநாள் நோன்பு பெருநாள்.

இந்த ஈகைத் திருநாளுக்கான அனைத்து முன்னேற்பாட்டு வேலைகளும் பலரின் வீட்டில் நிறைவு கட்டத்தை நெருங்கி இருக்கும் வேளையில், வேலைப்பளு காரணமாக, இன்றுதான் சிலர் அதற்கான முன்னேற்பாடுகளை தொடங்கியிருப்பர்.

மக்களின் அந்த பரபரப்பான தருணங்களைப் பெர்னாமா செய்திகள் நேரில் சென்று கண்டறிந்தது.

இன்று காலை தொடங்கி கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜிட் இந்தியா மக்கள் கூட்டத்தால் நிரம்பி இருப்பதைக் காண முடிந்தது.

பள்ளி விடுமுறை தொடங்கியிருக்கும் அதே வேளையில், வார விடுமுறையைப் பயன்படுத்தி கொண்டு ஈகை திருநாளுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்குச் சந்தைகளில் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

கடந்த ஆண்டுகளைப் போல், இவ்வாண்டும் சிறு வணிகர்கள் ஆங்கங்கே கூடாரமிட்டு தங்களது வியாபாரத்தைத் தொடங்கியிருப்பதால் பெரிய கடைகளுக்கு நிகராக அவர்களுக்கும் வியாபாரம் களைக் கட்டியது.

இந்நிலையில், வேலை காரணமாக இறுதி நேரத்தில் பொருட்கள் வாங்கும் சூழல் தங்களுக்கு ஏற்பட்டதாக சிலர் கூறிய வேளையில், இன்னும் சிலர் அந்த இறுதி தருணங்களில் தான் பொருட்களின் விலை மலிவாக இருக்கும் என்று கூறினர்.

“நல்லப்படியாக போய் கொண்டிருக்கின்றது. நாங்கள் முன்னதாகவே அனைத்தும் தயார் செய்து விட்டோம். வேலைக்குச் செல்வதால் அனைத்து ஏற்பாடுகளும் முன்னதாகவே செய்து விட்டேன். பொருட்களை வாங்குவது மற்றும் பலகாரங்களைச் செய்வது”, என்று ஷரிஃபா மதினா பேகம் கூறினார்.

“இதுவரை நான் சட்டைகளைப் பார்க்கவில்லை. ஆனால், நான் மேலோட்டமாக அன்று வந்து பார்க்கும் பொழுது, வழக்கம் போலதான். குறிப்பாக, நோன்பு பெருநாளின் போது விலைகள் சற்று அதிகமாகதான் இருக்கும். இருந்தாலும், சமாளிக்க முடிகின்றது”, என்றார் அஸிமா பிந்தி நவாப் ஜென்.

சாதாரண நாட்களிலேயே, மக்கள் கூட்டத்தால் நிரம்பி இருக்கும் ஜாலான் மஸ்ஜிட் இந்தியா, தற்போது பெருநாள் பரபரப்பில் இரட்டிப்பு கூட்டத்துடன் காணப்படுவதாக வணிகர்கள் சிலர் கூறினர்.

வாடிக்கையாளர்களின் வருகை ஒவ்வொரு நாளும் அதிகரிப்பதால், அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வண்ணம், வியாபாரத்தில் தாங்களும் சில சலுகைகளை வழங்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

“தற்போது ரம்சான் மாதம் என்பதால் மக்களின் வருகை நன்றாக இருக்கின்றது. நிறைய புதிய வடிவம் மற்றும் அமைப்பிலான நகைகள் கடையில் வந்திருக்கின்றது. குறிப்பாக, முஸ்லீம்கள் அணியக் கூடிய நகைகள் நிறைய இருப்பதால், வாடிக்கையாளர்களின் வருகை அதிகமாக இருக்கின்றது. புதிய வாடிக்கையாளர்களும் வருகின்றனர்”, என்று நகைக்கடை நிர்வாகி அமிர் பாஷா கூறினார்.

அதேவேளையில், நோன்பு பெருநாளுக்குப் பொருட்களை வாங்கும் அவசியம் ஏற்பட்டிருந்தாலும், விலைவாசிகளின் அதிகரிப்பால், கூடுதலாக செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாகவும் சிலர் குறைப்பட்டு கொண்டனர்.

Source : Bernama

#JalanMasjid
#Ramadan
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews