கோலாலம்பூர், 29/03/2025 : மியான்மாரில் நேற்று ஏற்பட்ட மோசமான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அங்கு அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் நோக்கில் நாட்டின் சிறப்பு மீட்பு மற்றும் தேடுதல் படையினரான ஸ்மார்ட் அங்கு செல்வதற்குத் தயாராகினர்.
இன்று பிற்பகல் மணி ஒன்று அளவில் அப்படையினர், யங்கூனைச் சென்றடைந்ததாக துணைப் பிரதமரும் தேசிய பேரிடர் நிர்வகிப்பு செயற்குழுத் தலைவருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
மேலும், மனிதாபிமான அடிப்படையில் தாய்லாந்திற்குத் தேவையான உதவிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதோடு மிக விரைவில் அது கொண்டு செல்லப்படும் என்று தமது முகநூல் பக்கத்தில் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் கூறினார்.
ஆசியான் சமூகத்தில் கடப்பாடு கொண்ட அண்டை நாடு மற்றும் ஒருமைப்பாடுமிக்க பங்களிப்பாளர் என்ற வகையில் மியன்மாருக்கு உதவ மலேசியா தனது முழு உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய பேரிடர் நிர்வாக நிறுவனமான நட்மா மூலம் முழு ஒத்துழைப்பை, குறிப்பாக நிபுணத்துவம், தொழில்நுட்ப சொத்துடைமைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நலனைப் பாதுகாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதோடு, பேரழிவுக்குப் பிந்தைய மீட்பு செயல்முறையை விரைவுப்படுத்தும், தளவாட உதவிகள் ஆகியவற்றின் வழி வலுப்படுத்துவதில் மலேசியா உறுதியாக உள்ளது.
தற்போதைய கடினமான சூழலை எதிர்கொள்வதில் மியன்மார் மற்றும் தாய்லாந்து மக்களுடன் மலேசியா உறுதுணையாக நிற்பதோடு, மனிதாபிமான உதவிகளில் தொடர்ந்து பங்களிக்கும் என்றும் அவர் சாஹிட் உறுதியாகத் தெரிவித்தார்.
Source : Bernama
#Myanmar
#Earthquake
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews