4 வாகனங்களை உட்படுத்திய விபத்தில் ஐவர் மரணம்

4 வாகனங்களை உட்படுத்திய விபத்தில் ஐவர் மரணம்

குளுவாங் , 28/03/2025 : நேற்றிரவு மணி 11.30-க்கு, குளுவாங், வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 58.1-வது கிலோமீட்டரில், நான்கு வாகனங்களை உட்படுத்திய விபத்தில், இரண்டு வயது குழந்தை உட்பட ஐவர் உயிரிழந்த வேளையில் எண்மர் காயமடைந்தனர்.

வோல்வோ ரக லாரி, டோயாட்டா கேம்ரி, புரோட்டோன் X50 மற்றும் ஹொன்டா ஸ்டெப் வாகோன் ஸ்பாடா ரக கார்களை உட்படுத்தி இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

ஜோகூர் பாருவிலிருந்து கோலாலம்பூரை நோக்கி பயணத்தில் இருந்த அந்த லாரியின் முன் டயர் திடிரென வெடித்ததில், அது கட்டுப்பாட்டை இழந்து அதே பாதையில் பயணித்துக்கொண்டிருந்த டோயாட்டா கேம்ரி காரை மோத நேரிட்டது.

பின்னர், அந்த லாரி எதிர்திசையில் கவிழ்ந்து, அத்தடத்தில் பயணித்துக்கொண்டிருந்த புரோட்டோன் X50 மற்றும் ஸ்டெப் வாகோன் ஸ்பாடா கார்களை மோதியது.

இம்மோதலினால், ஸ்டெப் வாகோன் ஸ்பாடா கார் தீப்பற்றியது.

எனினும், சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் அக்காரில் இருந்த அனைவரையும் வெளியே கொண்டு வந்தனர்.

புரோட்டோன் X50 காரின் ஓட்டுநரும் பயணியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அதோடு, ஸ்டெப் வாகோன் ஸ்பாடா-வில் பயணித்த இரண்டு வயது குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அதன் பெற்றோர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் மரணமடைந்தனர்.

இவ்விபத்தைத் தொடர்ந்து, 35 வயதுடைய லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

Source : Bernama

#IPD
#Kluang
#Accident
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews