கோலாலம்பூர், 28/03/2025 : ரோன் 95 பெட்ரோலுக்கான உதவித் தொகை செயல்முறையினால், 90 விழுக்காடு மலேசியர்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் சாத்தியக் கூறுகளை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.
இந்த செயல்முறை அமல்படுத்தப்பட்ட பிறகு, மக்களில் குறைந்தது 85 விழுக்காட்டினருக்கு பாதிப்பு ஏற்படாது என்று, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறுகிறார்.
“நேற்று நாங்கள் 85 விழுக்காடு அல்லது 90 விழுக்காடு யாருக்கு விதிப்பது, யார் அதற்கு உட்பட்டவர்கள் என்று ஆய்வு செய்தோம். வெளிநாட்டினர் மற்றும் மிகவும் செல்வந்தர்கள், அவர்களின் ஊதியம் மாதம் 50 ஆயிரம் ரிங்கிட் என்றால் கொஞ்சம் பணம் செலுத்துவார்கள். ஆனால் மற்றவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்,” என்றார் அவர்.
சிலாங்கூர் ஷா ஆலமில் உள்ள ராஜா துன் ஊடா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையை மேற்கொண்ட பின்னர், அன்வார் செய்தியாளர்களிடம் பேசினார்.
இது குறித்து மக்கள் கவலைப்பட வேண்டாம் என்று கூறிய பிரதமர், உதவித் தொகை தொடர்பான போலி தகவல்களை நம்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
2025-இன் அரையாண்டிற்கு பின்னர், ரோன் 95 பெட்ரோலுக்கான உதவித் தொகை வழங்கும் செயல்முறையை அரசாங்கம் அறிவிக்கும் என்று, இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமிர் ஹம்சா அசிசான் நேற்று தெரிவித்திருந்தார்.
தகுதியுள்ள பிரிவினருக்கு உதவித் தொகையை வழங்க, MyKad அடையாள அட்டை மற்றும் மின்-பணப்பையைப் பயன்படுத்துவது தற்போது ஆய்வு செய்யப்படும் முறைகளில் ஒன்றாகும் என்று அவர் மேலும் கூறினார்.
இதன் மூலம் பி40 மற்றும் எம்40 பிரிவினர் உட்பட பெரும்பாலான மக்கள், உதவித் தொகையை பெறும் நிலையில், உயர் வருமானம் பெரும் தரப்பினர், வெளிநாட்டினர் பெட்ரோலுக்கு கூடுதல் கட்டணம் செலுத்துவர்.
Source : Bernama
#RON95
#PMAnwar
#PetrolSubsidy
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews