ஏப்ரல் 1 முதல் 54 லட்சம் பேருக்கு சாரா உதவித் திட்டம்

ஏப்ரல் 1 முதல் 54 லட்சம் பேருக்கு சாரா உதவித் திட்டம்

கோலாலம்பூர், 26/03/2025 : ஏப்ரல் முதலாம் தேதி தொடங்கி, ரஹ்மா அடிப்படை உதவித் தொகை சாரா திட்டத்தின் அமலாக்கத்தை, 54 லட்சம் பேருக்கு விரிவுப்படுத்துவதாக மடானி அரசாங்கம் அறிவித்துள்ளது.

தற்போதுள்ள ஏழு லட்சம் பெறுநர்களைக் காட்டிலும், அந்த எண்ணிக்கை எட்டு மடங்காக அதிகரித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ், தகுதி பெற்றவர்களுக்கு கடந்தாண்டு ஆயிரம் ரிங்கிட் வழங்கப்பட்டு வந்த வேளையில், இவ்வாண்டு அது 75 விழுக்காடு அதிகரித்து ஈராயிரம் ரிங்கிட் வரை உயர்வு கண்டுள்ளதாக, நிதியமைச்சு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாட்டின் அதிகரித்த வருமானம் மற்றும் உதவித் தொகை சேமிப்பின் ஒரு பகுதியை தேவைப்படுபவர்களுக்கு உதவப் பயன்படுத்தும் இலக்கிடப்பட்ட உதவித் தொகையே இந்த சாரா திட்டம் என்று பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருந்தார்.

MyKad அடையாள அட்டையை உட்படுத்தி வழங்கப்படும் இத்தொகையைக் கொண்டு, இலக்கிடப்பட்ட குழுவினர், அடிப்படைப் பொருட்களை வாங்கி பயன் பெறலாம்.

ரஹ்மா ரொக்க உதவித் திட்டம் எஸ்.டி.ஆர் மற்றும் சாரா திட்டங்களின் விரிவாக்கத்திற்காக இவ்வாண்டு ஒதுக்கப்பட்ட 1,300 கோடி ரிங்கிட்டில் இது ஒரு பகுதியாகும் என்று அவர் விவரித்தார்.

அதேவேளையில், eKasih பட்டியலில் இல்லாத எஸ்.டி.ஆர் உதவித் தொகைப் பெறும் 47 லட்சம் பேருக்கு புதிய உதவியாக சாராவும் வழங்கப்படும்.

அதன் மூலம், வாழ்க்கைத் துணையில்லாத மூத்தகுடியினருக்கு மாதத்திற்கு 50 ரிங்கிட்டும், குடும்பங்களுக்கு 100 ரிங்கிட்டும் வரும் ஏப்ரல் முதலாம் தேதி தொடங்கி வழங்கப்படும்.

Source : Bernama

#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews