இந்திய வர்த்தர்களின் தொழில் வளர்ச்சிக்கு ‘வணிகம்’ திட்டம் அறிமுகம்

இந்திய வர்த்தர்களின் தொழில் வளர்ச்சிக்கு 'வணிகம்' திட்டம் அறிமுகம்

கோலாலம்பூர், 25/03/2025 : இந்திய சிறு தொழில் வணிகர்களின் மேம்பாட்டிற்காகவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நீரோட்டத்தில் அவர்களும் விடுபட்டு விடக்கூடாது என்ற நோக்கத்திலும் ‘வணிகம்’ எனும் புதிய திட்டம் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

SME வங்கியின் வாயிலாக இத்திட்டத்திற்கு ஐந்து கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

மடானி அரசாங்கத்தின் கீழ் அமைச்சு பல திட்டங்களை இந்திய வணிகர்களின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

தெக்குன் ஸ்பூமி கோஸ் பிக், அமானா இக்தியாரின் ‘பெண்’ திட்டம், பேங்க் ரக்யாட்டின் கீழ் பிரிவ்-ஐ, எஸ்எம்இ கோர்ப் வாயிலாக I-BAP உட்பட பல திட்டங்கள் அதில் அடங்கும்.

அந்த வரிசையில் புதிதாக அறிமுகம் கண்டுள்ள இந்த ‘வணிகம்’ திட்டம், சுமார் 250 வணிகர்களின் தொழில் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றும் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் நம்பிக்கை தெரிவித்தார்.

“ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் ரிங்கிட் வரையில் இந்த வங்கியிலிருந்து கடனுதவியை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இதற்கான வட்டி விகிதல் 3.7-இல் இருந்து 6 விழுக்காடு வரை மட்டுமே நிர்ணயிக்கின்றனர். மேலும் இத்திட்டம் முழுமையாக வெற்றியடைய வேண்டும் என்பதற்காக சம்பந்தப்பட்ட வங்கியின் ஏற்பாட்டில் வழிகாட்டி முகப்பும் தயார் செய்யப்பட்டுள்ளது,” என்று அவர் விவரித்தார்.

எனவே, இணையம் மூலமாகவோ அல்லது வங்கிக்கு நேரடியாகச் சென்றோ விண்ணப்பிப்போரின் விண்ணப்பங்கள் விரைவில் பரிசீலிக்கப்பட்டு அதை ஏற்றுக் கொள்ளும் நடைமுறைகள் தற்போது துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

வெறும் வணிக நிதி வழங்குவது மட்டுமின்றி, வணிக வளர்ச்சி, புத்தாக்க நுணுக்கம், முறையான கணக்கு வழக்குகளைக் கொண்டிருப்பது, கவரக்கூடிய முறையில் வணிகத்தை மாற்றும் விதம் உள்ளிட்ட பலவற்றை வங்கிப் பணியாளர்கள் இத்திட்டத்தின் மூலமாக இந்திய வணிகர்களுக்கு கற்றுக் கொடுப்பார்கள்.

எனவே, குறைந்த வர்த்தக அறிவில் வியாபாரத்தை தொடங்கினாலும், இத்தகைய வழிகாட்டியின் மூலம், மிக விரைவில் வியாபாரத்தில் அவர்களால் பீடுநடைப் போட முடியும் என்று ரமணன் குறிப்பிட்டார்.

குறைந்தது 1 லட்சம் ரிங்கிட்டில் இருந்து 3 லட்சம் ரிங்கிட் வரை கடனுதவிக்கு விண்ணப்பிப்பதன் மூலம், தொழிலுக்கு தேவையான இயந்திரங்கள் வாங்குவது, வர்த்தக வாகனங்கள் வாங்குவது உட்பட வர்த்தக விரிவாக்க திட்டங்களுக்கு இக்கடனுதவியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதேவேளையில், அமைச்சின் கீழுள்ள மற்ற கடனுதவிகளையோ அல்லது மானியத்தையோ பெற்றவர்களாக இருப்பினும், வியாபார வளர்ச்சிக்காக ‘வணிகம்’ திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என்றும் அவர் விவரித்தார்.

இன்று கோலாலம்பூரில் உள்ள MENARA SME-இல் நடைபெற்ற ‘வணிகம்’ திட்டத்தின் தொடக்க விழாவிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
Source : Bernama

#Vanigham
#RRamanan
#SMEbank
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews