தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தை புதிய இடத்திற்கு மாற்றுவதற்கான இடத்தை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது

தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தை புதிய இடத்திற்கு மாற்றுவதற்கான இடத்தை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது

கோலாலம்பூர், 25/03/2025 : 4000 சதுர அடி பரப்பளவில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தை, அதே அளவில் அதன் அசல் பகுதிக்கு அருகில் உள்ள புதிய இடத்திற்கு மாற்றுவதற்கான இடத்தை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது.

எனினும், சட்டப்பூர்வ ஆவணப்படுத்தல் செயல்முறை முடிந்த பிறகு, புதிய தளத்தின் கட்டுமானப் பணிகள் நடைமுறையில் உள்ள மேம்பாட்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்று கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சலிஹா முஸ்தாபா தெரிவித்தார்.

நடப்பில் உள்ள ஆலயக் கட்டமைப்பை இடிக்க மாட்டோம் என்ற உறுதிமொழியை அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியதாகவும் டத்தோ ஶ்ரீ டாக்டர் சலிஹா கூறினார்.

இடமாற்ற செயல்முறை முழுமையாக அமைதியான சூழ்நிலையில் நிறைவடையும் வரை அந்த ஆலயம் வழக்கம் போல் செயல்பட அனுமதிக்கப்படும்.

இத்தீர்வு இச்சம்பவத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும், மற்ற வழிபாட்டுத் தலங்களுக்கு முன்னுதாரணமாக இதைப் பயன்படுத்த முடியாது என்றும் டாக்டர் சலிஹா வலியுறுத்தினார்.

இன்று, கோலாலம்பூர் மாநகராண்மைக் கழக கோபுரத்தில் நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடலுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு கூறினார்.

இக்கூட்டத்தில், டத்தோ பண்டார் கோலாலம்பூர் டத்தோ ஶ்ரீ டாக்டர் மைமூனா முஹ்மட் ஷாரிப், ம.இ.கா துணை தலைவர் டத்தோ ஶ்ரீ எம். சரவணன், கூட்டரசு பிரதேச துறை தலைமை இயக்குநர் டத்தோ ஶ்ரீ நோரிடா அப்துல் ராஹிம், ஒருமைப்பாட்டு துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி, தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத் தலைவர் பார்த்திபன் கண்மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Source : Bernama

#DewiSriPathrakaliammanTemple
#DatukSeriMSaravanan
#DBKL
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews