கோத்தா பாரு, 23/03/2025 : பல்கலைக்கழக இந்திய மாணவர்களுக்கு மத்தியில் மொழி உணர்வை ஏற்படுத்தும் விதமாக, 2025-ஆம் ஆண்டுக்கான ‘செம்மொழி சங்கமம்’ எனும் சொற்போர் போட்டியை, நேற்று, கிளந்தான், கோத்தா பாருவில் உள்ள மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் ஏற்று நடத்தியது.
வெறும் விவாத களமாக மட்டுமின்றி தமிழ்மொழியின் மீதான அன்பையும் மகத்துவத்தையும் மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டதாக, அதன் இயக்குனர் பி. லோகிதா கூறினார்.
தேசிய ரீதியாக நடத்தப்பட்ட இப்போட்டியில், குபாங் கெரியான் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம், சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக் கழகமான, மலேசிய கிளாந்தான் பல்கலைக்கழகம், துவாங்கு பைனுன் ஆசிரியர் கல்வி கழகம், சுல்தான் சைனால் அபிடின் பல்கலைக்கழகம் மற்றும் சுல்தான் மிசான் சைனால் அபிடின் பாலிடெக்னிக் Politeknik ஆகியவற்றை பிரதிநிதித்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
வழக்கமான சொற்போர் போட்டியாக இல்லாமல், ஒரே மேடையில் நான்கு குழுக்களாக பிரித்து நடத்தப்பட்ட இப்போட்டி பங்கேற்பாளர்களுக்குப் புதிய அனுபவமாக அமைந்ததாக, பி. லோகிதா கூறினார்.
“புது முறையில், எப்பொழுதும் பட்டிமன்றத்தில் பார்த்தோமானால் இரு அணிகள் ஒரு மேடையில் இருப்பார்கள். ஆனால், இம்முறை நான்கு அணிகள் ஒரே மேடையில், ஒரே நேரத்தில் போட்டியிட்டனர். புது முறையில் அமைந்தாலும், மலேசியாவில் உள்ள மாணவர்களின் பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது”, என்று அவர் கூறினார்.
மேலும், பொருளாதாரம், மொழி மற்றும் சமூகத்தின் இளைஞர்களின் பங்களிப்பு போன்ற தலைப்புகளில் விவாதங்கள் நடத்தப்பட்டதாக, அவர் கூறினார்.
இதனிடையே, தேசிய அளவிலான 2025-ஆம் ஆண்டுக்கான ‘செம்மொழி சங்கமம்’ சொற்போர் போட்டியில், துவாங்கு பைனுன் ஆசிரியர் கல்வி கழகத்தைச் சேர்ந்த ‘சொல் வேந்தர்’ குழு, தங்களின் சிறந்த வாத திறமையின் மூலம், 1,000 ரிங்கிட் ரொக்க தொகையையும் வெற்றிக் கோப்பையையும் தட்டிச் சென்றனர்.
“இந்த வெற்றி என்பது எங்களுக்கு பெருமையாக தான் இருக்கின்றது. ஏனென்றால், இதன் அமைப்பு சற்று மாறுப்பட்ட அமைப்பாக இருந்துள்ளது. அதனால், நாங்கள் செய்த சில முயற்சிகள் மற்றும் விரிவுரையாளர்களின் வழிகாட்டுதல்கள், அதன் அடிப்படையில் இந்த வெற்றி எங்களுக்கு கிடைத்துள்ளது”, என்றார் ஆர். மதிவேந்தன் நாயுடு.
இனி வரும் ஆண்டுகளில், இன்னும் அதிகமான பல்கலைக்கழக மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்பர் என்று ஏற்பாட்டுக் குழு பெரிதும் எதிர்பார்க்கிறது.
Source : Bernama
#USM
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews