கோலாலம்பூர், 22/03/2025 : ஒருவர் நோன்பை உண்மையாக நோற்கின்றார் என்றால் அது இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
ஒருவர் தனிமையில் உண்ண நினைத்தால், அவ்வாறு செய்து விடலாம்.
ஆனால், பசித்திருந்தும் உண்ணாமல், தாகித்திருந்தும் பருகாமல், நோன்பை கடைபிடித்தால், நோன்பாளி தம்மை படைத்த இறைவனுக்கு மட்டுமே அர்ப்பணித்து வாழ்வதாகும்.
இவ்வாறு, தமது ஆசைகளையும் உணர்வுகளையும் விட்டுக்கொடுத்து வாழும் நோன்பாளிகளுக்கு இறைவன் அளவில்லா நன்மைகளை வழங்குவதாக கூறுகின்றார்
இஸ்லாமிய பேச்சாளரும் எழுத்தாளருமான, உஸ்தாத், கம்பம் பீர் முகமது.
உண்ணாமல் பருகாமல் இருப்பது மட்டும் நோன்பு அல்ல.
ஆன்மீக ரீதியில் நன்மை வழங்கிடும் இஸ்லாமியர்களின் புனித நூலான இறைமறையாம் அல்கூரானை நாள்தோறும் ஓதி, அதில் உள்ளது போலவே பின்பற்றி நோன்பு காலத்தில் வாழ வேண்டும்.
அதோடு, இக்கால கட்டத்தில் ஈகை பண்போடு எழை எளியோருக்கும் உதவ வேண்டும்.
அதனை சரியாக செய்யும் போதுதான் ஒருவரின் நோன்பு முழுமை அடைவதாக உஸ்தாத் கம்பம் பீர் முகமது கூறுகின்றார்.
நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளவர்களே நோன்பு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடல் நலமில்லாதவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், போன்றவர்களுக்கு நோன்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
சிலருக்கு நோன்பு இருத்தல் எளிதாக இருக்கும்.
ஆனால், மற்றவர்களுக்கு அது சவாலானதாக இருக்கும் வேளையிலும் முறையாக அதனை கடைபிடிப்பவரை, நோன்பு கேடயமாக பாதுகாப்பதாகவும் பீர் முகமது தெரிவித்தார்.
”அந்த நோன்பாளி தன்னை பக்குவப்படுத்துகிறார். உணர்வுகள் மிக முக்கியமானது. சிறு குழந்தைகள் கூட நோன்பு இருக்கிறார்கள். அதே போல வயது முதிர்ந்தவர்களும் நோன்பிருக்கின்றார்கள். காரணம் நோன்பு அவர்களுக்கு சிரமமாகவே தெரியவில்லை,” என்றார் அவர்.
நோன்பின் மாண்பு குறித்து பெர்னாமாவுக்கு வழங்கிய சிறப்பு நேர்க்காணலின் போது, உஸ்தாத் கம்பம் பீர் முகமது அந்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
Source : Bernama
#RamadanFastingBenefits
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews