கோம்பாக், 22/03/2025 : இன்று முதல் முழுமையாகச் செயல்படத் தொடங்கியுள்ள கோம்பாக் ஒருங்கிணைந்த முனையம், தி.பி.ஜி, நவீன வசதிகள், ஆக்கப்பூர்வமான சேவை, பரந்த வடிவமைப்பு மற்றும் பயணிகளின் வசதி ஆகியவற்றிற்கு பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.
அம்முனையத்திற்கு வருகை புரியும் பெரும்பாலான பயணிகள், எளிதான இலகு ரயில் சேவை முறை அணுகல், வாகன நிறுத்துமிட வசதி, பல்வேறு வணிகத்திற்கான வர்த்தகப் பகுதி உட்பட அங்குள்ள வசதிகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கிழக்குக்கரையில் இருந்து கோலாலம்பூருக்கு திரும்பும் நுழைவாயிலில் தி.பி.ஜி அமைந்திருப்பது, பேருந்து பயணியான தமக்கு பயண நேரத்தை குறைத்துள்ளதாக நிக் அலிசா வான் முஹமட் மொஹைதீன் எனும் பயணி கூறினார்.
சம்பந்தப்பட்ட முனையத்திற்கு முதல் முறையாக வருகை புரிந்த திரெங்கானு, கோலா பேராங்கை சேர்ந்த அவர், அங்குள்ள சூழல், முழுமையான மற்றும் நவீன வசதிகள் குறித்து வியப்படைந்ததாகக் குறிப்பிட்டார்.
“மிகவும் சிறந்ததாக உள்ளது. முதல் முறையாக இங்கு வந்தடைந்ததும் நான் ஆச்சரியப்பட்டேன். அதிநவீனமாக உள்ளன. ஆனால், தற்போது இந்த டி.பி.ஜி ரெட்பசில் உள்ள முறை இல்லை. டிக்கெட்டை தி.பி.ஜி Online மூலமே வாங்க முடியும். மேம்படுத்தப்படும் சாத்தியம் உள்ளது,” என்றார் அவர்.
தற்போதைய, பேருந்து சேவை சில இடங்களை மட்டுமே உள்ளடக்கி இருக்கும் வேளையில், விரைவில் கிழக்குக்கரையில் இன்னும் அதிகமான பகுதிகளுக்கு விரிவுப்படுத்தபட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
அதேவேளையில், இந்த முனையத்தில் இன்னும் அதிகமான பேருந்து நிறுவனங்கள் செயல்படத் தொடங்க வேண்டும் என்று மற்றொரு பயணியான எஃபிசா ஹெர்மன் கேட்டுக் கொண்டார்.
இதன்வழி, கிழக்குக்கரைக்குச் செல்லும் பேருந்தில் பயணிக்க, TBS அல்லது Greenwood-டிற்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்றும் அவர் கூறினார்.
“முதல் முறையாக நான் கோத்தா பாருவிற்கு பேருந்து ஏறினேன். எனது இல்லம் ரவாங்கில் உள்ளதால், இந்த முனையத்திற்கு வருகை புரிவது எளிதாக இருந்தது. அதோடு, மற்றொரு முனையத்துடன் ஒப்பிடுகையில் இது இன்னும் அருகில் உள்ளது. எனவே, நான் இந்த முனையத்திற்கு வந்து பார்த்தேன். பெரிதாக தான் உள்ளது,” என்றார் அவர்.
Jalan Lingkaran Tengah 2 (MRR2)-வில், கோம்பாக் டோல் சாவடிக்கும், கோம்பாக் LRT நிலையத்திற்கும் அருகில் இருக்கும் இந்த தி.பி.ஜி, பகாங், திரெங்கானு மற்றும் கிளந்தானை உள்ளடக்கிய கிழக்குக்கரை பயணத்திற்கான முதன்மை போக்குவரத்து தளமாகும்.
Source : Bernama
#TBG
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews