கோலாலம்பூர், 20/03/2025 : மிகவும் மோசமான நிலையில் உள்ள அதிகம் புதுப்பிக்கப்பட வேண்டிய அடிக்குமாடி குடியிருப்புகளுக்கு வீடமைப்பு மற்று ஊராட்சி துறை அமைச்சு, கேபிடி தரப்பு வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி அலுவல் பயணம் மேற்கொள்ளவிருக்கிறது.
அங்குள்ள நிலவரத்தை நேரில் காண மேலவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் குறிப்பாக எதிர்கட்சியைச் சேர்ந்தவர்களையும் தங்கள் தரப்பு அழைக்கவிருப்பதாக அதன் அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.
”ஆர்வமுள்ளவர்கள் அனைவரையும் நாங்கள் அழைக்கவுள்ளோம். நாங்கள் நாடாளுமன்றத்தில் இருந்து பேருந்தில் சென்று நான்கு இடங்களைக் காணவுள்ளோம். மோசமான இரண்டு இடங்களும், மேம்படுத்தப்பட்ட இரண்டு இடங்களும் ஆகும். எனவே, (மேம்படுத்தப்படுவதற்கு) முன்னரும் பின்னரும் எப்படி உள்ளது என்று நீங்கள் காணலாம். பின்னர், இந்த சட்டம் ஏன் முக்கியம் என்று நீங்கள் மதிப்பிட்டுக் கொள்ளலாம்,” என்றார் அவர்.
இதன்வழி அவர்கள் நகர புதுப்பித்தல் சட்ட மசோதாவின் அவசியத்தை அறிந்து கொள்ள முடியும் என்று ஙா கூறினார்.
அதைத் தவிர்த்து, அதிகரித்து வரும் சொத்தின் மதிப்பிற்கு ஏற்ப உரிமையாளர்களுக்கும் மேலும் சிறந்த குடியிருப்பு கிடைக்க இந்த புதுப்பித்தல் நடவடிக்கை உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நேற்றிரவு நடைபெற்ற வீடமைப்பு மற்று ஊராட்சி துறை அமைச்சருடனான சந்திப்பு நிகழ்ச்சியில் ஙா செய்தியாளர்களிடம் பேசினார்.
நோன்பு பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு திரும்புவோர், சாலைகளில் தூய்மையைக் கடைப்பிடிக்கும் நோக்கில், வாகனங்களிலிருந்து குப்பைகளை வெளியில் வீச வேண்டாம் என்று அவர் நினைவுறுத்தினார்.
2025-ஆம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது சுத்திகரிப்பு சட்டத் திருத்த மசோதா, 2025-ஆம் ஆண்டு ஊராட்சித் துறை சட்டத் திருத்த மசோதா மற்றும் சாலைகள், வடிகால்கள் மற்றும் கட்டிடங்களுக்கான சட்டத் திருத்த மசோதா ஆகியவை மக்களவையில் முதல் வாசிப்பிற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதன் வழி, சிறிய குப்பைகளை வீசும் குற்றங்களுக்கு, 12 மணி நேரம் வரை சமூக சேவை உத்தரவை விதிக்க நீதிமன்றத்திற்கு அனுமதியளிக்கப்படும் என்றும் ஙா தெரிவித்தார்.
“இவ்வாண்டில் இந்த சட்டம் அமலுக்கு வரும் என நான் நம்புகிறேன். ஏனெனில், அடுத்தாண்டு மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டு. காத்திருக்க முடியாது. வெளிநாட்டவர்கள் மலேசியாவிற்கு வரும்போது அசுத்தமாக இருப்பதை பார்க்க கூடாது. அது கண்டிப்பாக வெட்கமாக இருக்கும். நாட்டின் நற்பெயர் காக்கப்படுவதை நாம் உறுதிச் செய்ய வேண்டும்,” என்றார் அவர்.
Source : Bernama
#NgaKorMing
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews