ஆலய இடமாற்ற விவகாரம் முறையாக தீர்வு காணப்படுவதை டி.பி.கே.எல் உறுதி செய்யும்

ஆலய இடமாற்ற விவகாரம் முறையாக தீர்வு காணப்படுவதை டி.பி.கே.எல் உறுதி செய்யும்

கோலாலம்பூர், 20/03/2025 : ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில், தனியார் நிலத்தில் அமைந்திருக்கும் தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தை புதிய இடத்திற்கு மாற்றும் நடவடிக்கைகள் சுமூகமாக தீர்ப்பதை உறுதி செய்வதில் கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகம், டி.பி.கே.எல் முக்கியப் பங்கு வகிக்கும்.

அரசாங்கத்தால் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கும் டி.பி.கே.எல், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் சிறந்த தீர்வைக் கண்டறிய உதவும் வகையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அதன் கோலாலம்பூர் டத்தோ பண்டார் டத்தோ ஶ்ரீ டாக்டர் மைமுனா முஹமட் ஷாரிஃப் தெரிவித்துள்ளார்.

கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மதத் சுதந்திர கொள்கையின் படி, ஒவ்வொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதை டி.பி.கே.எல் உறுதிச் செய்யும் என்றும் அவர் கூறினார்.

வசதியான முறையில் வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யும் வகையில் சம்பந்தப்பட்ட ஆலயத்தை இடமாற்றம் செய்வதற்கான புதிய இடத்தை டி.பி.கே.எல் அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இடமாற்ற செயல்முறை நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் சுமூகமாக மேற்கொள்ளப்படுவதற்கு, முக்கிய தரப்புகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்றும் டாக்டர் மைமுனா உறுதியளித்தார்.

“நாங்கள் ஆலயத்துடன் கலந்துரையாடி வருகிறோம். விவாதங்கள் நடந்து வருகின்றன. நாங்கள் நேரம் எடுத்துக் கொள்வோம். இரு தரப்பினருமே ஒப்புக்கொண்ட இடத்தைப் பெறுவோம்,“ என்றார் அவர்.

இன்று மஸ்ஜிட் இந்தியாவில் அமைந்திருக்கும் அந்த ஆலயத்தை பார்வையிட வந்த போது செய்தியாளர்களைச் சந்தித்த டாக்டர் மைமுனா இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

Source : Bernama

#DewiSriPathrakaliammanTemple
#DBKL
#JalanMasjidIndia
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews