கோலாலம்பூர், 17/03/2025 : புகைப்பிடித்தல் மற்றும் VAPE எனப்படும் மின்னியல் சிகரேட்டுகளினால் அதிகமான இறப்புகளும் சுகாதார நெருக்கடிகளும் ஏற்படுகின்றன.
சுகாதாரத்திற்கு தீங்கு விளைக்கும் அந்நடவடிக்கைகளை கட்டுப்படுத்த புகைப்பிடிப்பதற்கும் மின்னியல் சிகரேட்டுகளுக்கும், முழு தடையை அரசாங்கம் விதிக்க வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் பரிந்துரைத்துள்ளது.
சட்டவிரோதப் போதைப் பொருள் பூசப்பட்ட வேப் திரவங்கள், போதை பழக்கத்தை உண்டாக்குகின்றன.
அதுமட்டுமின்றி, இத்தகைய வேப் திரவங்கள் மற்றும் புகைப்பிடித்தல் நடவடிக்கை அளவுக்கு அதிகமான மரணங்களை ஏற்படுவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி & ஆய்வுப் பிரிவு அதிகாரி, என்.வி. சுப்பாராவ் சுட்டிக்காட்டினார்.
”டெட்ராஹைட்ரோகன்னாபினோல் (THC), ஃபெண்டானில், மெத்தாம்பேட்டமைன், கோகோயின், ஹெராயின், எல்எஸ்டி அனலாக்ஸ் மற்றும் செயற்கை ஹாலுசினோஜென்கள் உட்பட வேப்பில் சேர்க்கப்படுகின்றன. மலேசியாவில் சட்டவிரோதப் போதைப் பொருள் கலந்த வேப்கள் இருப்பது இப்பொழுது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது,” என்றார் அவர்.
போதைப் பொருட்கள் கலக்கப்பட்ட வேப் திரவங்கள் 2015ஆம் ஆண்டு முதல் சந்தைகளில் விற்கப்பட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், வேப் திரவங்கள் தொடர்புடைய போதைப் பொருள் சம்பவங்களை போலீஸ் அடையாளம் கண்டிருப்பதையும் சுப்பாராவ் குறிப்பிட்டுள்ளார்.
”கடந்த ஆண்டில் “மேஜிக் மஷ்ரூம்” என்று அழைக்கப்படும் வேப்களில் இயற்கையான சைலோசைபினுக்குப் பதிலாக செயற்கை மருந்து காக்டெய்ல் இருப்பது கண்டறியப்பட்டது. 2024-ஆம் ஆண்டில் போதைப்பொருள் கலந்த வேப் திரவ அடங்கிய 119 சம்பவங்களை போலீஸ் பதிவு செய்தது,” என்றார் அவர்.
வேப்பின் மூலம் பரவும் போதைப் பொருள் சம்பவங்களை சாதாரணமாக கருதக் கூடாது.
நாளடைவில் அது மிகப் பெரிய ஆபத்துகளைக் கொண்டு வருவதற்கான சாத்தியங்கள் இருப்பதால், உடனடி நடவடிக்கை தேவை என்கிறார் சுப்பாராவ்.
”வேப்பில் சேர்க்கப்படுகின்ற திரவங்களில் அபாய அளவில் போதைப் பொருள் இருப்பதால் அரசாங்கம் உடனடியாக தடை செய்ய வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக் கொள்கிறது. பெரிய அளவிலான போதைப்பொருள் நெருக்கடியைத் தடுக்க அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.,” என்றார் அவர்.
எனவே, வளரும் தலைமுறையினரை கருத்தில் கொண்டு, போதைப் பழக்கங்கள் பரவுவதைத் தடுக்க அனைத்து விதமான புகைப்பிடிக்கும் பொருட்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று சுப்பாராவ் கேட்டுக் கொண்டார்.
Source : Bernama
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews