உங்கு ஒமார் போலிடெக்னிக்கில் நடைபெற்றது பயிற்சி மட்டுமே – போலீஸ் விளக்கம்

உங்கு ஒமார் போலிடெக்னிக்கில் நடைபெற்றது பயிற்சி மட்டுமே - போலீஸ் விளக்கம்

ஈப்போ, 17/03/2025 : பேராக், ஈப்போவில் உள்ள உங்கு ஒமார் போலிடெக்னிக், PUO-இல் பயங்கரவாத தாக்குதல், துப்பாக்கிச் சூடு மற்றும் மாணவர்களைப் பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த சம்பவம் இன்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

அது, 69 கமாண்டோ சிறப்பு அதிரடிப் படை PGK-இன் நிர்வாக மற்றும் பயங்கரவாத நெருக்கடிகளைக் கையாளும் பயிற்சி என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர்.

தேசிய பாதுகாப்பு மன்றம் நிர்ணயித்த பயங்கரவாத நெருக்கடியை நிர்வகிப்பதற்கும், கையாள்வதற்கும் அரச மலேசிய போலீஸ் படை பிடிஆர்எம், PUO மற்றும் ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனை உட்பட சம்பந்தப்பட்ட தரப்பினரின் ஆயத்த நிலையை சோதிக்க சிறிய அளவில் அப்பயிற்சி நடத்தப்பட்டதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் அபாங் சைனால் அபிடின் அபாங் அஹ்மட் தெரிவித்தார்.

போலிடெக்னிக் பகுதியில் காணப்பட்ட போலீஸ் படையினர் பிடிஆர்எம் விமானப்படையின் ஹெலிகாப்டர் உட்பட பாதுகாப்பு மற்றும் சுகாதார குழு வாகனங்கள் ஆகியவை அப்பயிற்சியின் ஒரு பகுதியாகும் என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பயங்கரவாத நெருக்கடிகளைக் கையாளும் செயல்திட்டத்தின் திறனாற்றலை சோதிக்கும் வகையில் இப்பயிற்சி அவ்வப்போது மேற்கொள்ளப்படுகிறது.

இன்று காலை, ஆயுதமேந்திய கும்பல் ஒன்று, விரிவுரையாளர் மற்றும் சில மாணவர்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த காணொளி பகிரப்பட்டது அக்கல்விக் கழகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Source : Bernama

#Entamizh
#PGK
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews