சங்காட் ஜோங், 15 மார்ச் (பெர்னாமா) — நேற்று, தெலுக் இந்தான், ஜாலான் சங்காட் ஜோஙில் கலவரத்தைத் தூண்ட முயற்சித்ததாகச் சந்தேகிக்கப்படும், தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் நேபாள பிரஜைகள் 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
நேற்றிரவு மணி 9.35 அளவில், ஜாலான் சங்காட் ஜோங், பத்து எட்டில், நேபாள பாதசாரி ஒருவரை உட்படுத்திய விபத்தினால் இச்சம்பவம் ஏற்பட்டதாக, ஹிலிர் பேராக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி டாக்டர் பக்ரி சைனால் அபிடின் தெரிவித்தார்.
மோதிவிட்டு தப்பியோடியச் சம்பவத்தில் அவ்வாடவர் உயிரிழந்தார்.
அப்பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றின் சுமார் 1,000 தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று போக்குவரத்தைத் தடைசெய்தது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் ஏசிபி டாக்டர் பக்ரி கூறினார்.
அதனைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் பொருட்டு தெலுக் இந்தான் மாவட்ட போலீஸ் தலைமையகத்திலிருந்து ஒரு குழுவினர் அங்கு அனுப்பப்பட்டனர்.
அதிகாலை மணி இரண்டிற்கு நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட வேளையில், அத்தொழிலாளர்கள் அனைவரும் தங்களின் தங்குமிடத்திற்கு திரும்பியதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட அந்த 13 பேரும் குற்றவியல் சட்டம் செக்ஷன் 147-இன் கீழ் விசாரிக்கப்படும் நிலையில், அச்சாலை விபத்து 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்து சட்டம் செக்ஷன் 41(1)-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.
இந்நிலையில், அவ்விபத்து குறித்து அறிந்தவர்கள் 011-10065817 என்ற எண்ணில் இன்ஸ்பெக்டர் முஹ்மட் ஷாமிலை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Source : Bernama
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews