புத்ராஜெயா, 13/03/2025 : தம்மை சம்பந்தப்படுத்திய ஊழல் மற்றும் கள்ளப்பண பறிமாற்ற வழக்கின் விசாரணைக்கு உதவும் பொருட்டு, முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப், இன்று, புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் வாக்குமூலம் அளித்தார்.
ஐந்து மணி நேரத்திற்கு மேலாக தமது வாக்குமூலத்தைப் பதிவு செய்த அவர், மாலை மணி 3.13-க்கு எஸ்பிஆர்எம் தலைமையகத்திலிருந்து வெளியேறினார்.
செய்தி சேகரிப்பிற்காக காலையில் இருந்து அங்கு காத்திருந்த ஊடகவியலாளர்களிடம் கை மட்டுமே அசைத்தவாறு இஸ்மாயில் சப்ரி சென்றார்.
எனினும், ஊடகவியலாளர்களுக்கு எந்தவொரு பதிலையும் அவர் அளிக்காத நிலையில், இந்த விசாரணை நாளை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, காலை மணி 9.46-க்கு, இஸ்மாயில் சப்ரியை ஏற்றி வந்த வாகனம் காலை மணி 9.46-க்கு எஸ்பிஆர்எம் அலுவலக வளாகத்தை வந்தடைந்தது.
கடந்த மார்ச் ஏழாம் தேதி டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரியிடம் இருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
எனினும், உடல் நலக் குறைவினால், அந்நடவடிக்கை இன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி தமது வீட்டில் மயங்கி விழுந்த அவர், தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
அண்மையில் ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் இஸ்மாயில் சப்ரிக்குத் தொடர்புடையதாக நம்பப்படும் 17 கோடி ரிங்கிட் ரொக்கப் பணமும், 70 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள தங்க கட்டிகளும் கண்டெடுக்கப்பட்டதாக எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி கடந்த மார்ச் மூன்றாம் தேதி அறிவித்திருந்தார்.
விசாரணைக்கு உதவும் பொருட்டு, இதுவரை 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள 13 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
Source : Bernama
#IsmailSabriYaakob
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews
Comments are closed, but trackbacks and pingbacks are open.