பொக்கொக் செனா, 09/03/2025 : கடன் பெறும் நோக்கத்துடன் வேறொருவரின் மைகார்ட் எனப்படும் அடையாள அட்டையைப் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை தேசிய பதிவுத் துறை, ஜே.பி.என் நேற்று கைது செய்தது.
ஜே.பி.என் விரைந்து செயல்பட்டதை அடுத்து, கோலாலம்பூர், கம்போங் பண்டானில் நேற்றிரவு மணி 7.30-க்கு 35 வயதுடைய அந்த உள்ளூர் ஆடவர் கைது செய்யப்பட்டதாக, உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
”நபர் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தமது மைகார்ட் அட்டை தொலைந்து போனதாக சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். திடீரென்று வேறொருவர் தமது அடையாளத்தைப் பயன்படுத்தி தொலைபேசி மற்றும் இதர பொருள்களை வாங்க கடன் வாங்குவதைக் கண்டறிந்தார். அவர் தமது மைகார்ட் அட்டை தொலைந்து போனதைப் புகாரளிக்க முன்வந்தார். மேலும் தமது மைகார்ட் அட்டை வேறொருவரால் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகித்ததை அடுத்து புகார் அளித்தார். அதன் அடிப்படையில், ஜே.பி.என்-இன் உளவுத்துறை விசாரணை நடத்தி மார்ச் ஏழாம் தேதி சந்தேக நபரைக் கைது செய்தது,” என்றார் அவர்.
நேற்று, கெடா, பொக்கொக் செனாவில் ஜே.பி.என் உடன் நன்னெறிகளை விதைப்பதற்கான நிகழ்ச்சியில் கலந்துகொண்டப் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அச்சந்தேக நபரின் உண்மையான விவரம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சைஃபுடின் நசுத்தியோன் கூறினார்.
போலி மைகார்ட் அட்டையை சொந்த அடையாளமாகப் பயன்படுத்தியதற்காகவும் வேறொருவரின் மைகார்ட் அட்டையை வைத்திருந்ததற்காகவும், 1990-ஆம் ஆண்டு தேசிய பதிவு விதிமுறைகள், விதிமுறை 25(1)(e) மற்றும் 25(1)(o)-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.
Source : Bernama
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews
Comments are closed, but trackbacks and pingbacks are open.