ஊழல் வழக்கில் இஸ்மாயில் சப்ரி விசாரிக்கப்படுவார்

ஊழல் வழக்கில் இஸ்மாயில் சப்ரி விசாரிக்கப்படுவார்

புத்ராஜெயா, 03/03/2025 : விளம்பரத்திற்கான நிதி சம்பந்தப்பட்ட ஊழல் மற்றும் கள்ளப்பண பரிமாற்றம் வழக்கில் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் பெயரும் இடம்பெற்றிருப்பதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்.பி.ஆர்.எம் உறுதிப்படுத்தியுள்ளது.

அண்மையில் ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில், இஸ்மாயில் சப்ரிக்குத் தொடர்புடையதாக நம்பப்படும் 17 கோடி ரிங்கிட் ரொக்கப் பணமும், 70 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள தங்க கட்டிகளும் கண்டெடுக்கப்பட்டதாக எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.

பாதுகாப்பு கருதி, அந்த அனைத்து ரொக்கப் பணமும், தங்கக் கட்டிகளும் சொகுசு அடுக்குமாடி வீடொன்றில் உள்ள மூன்று இரும்புப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்ததாக டான் ஶ்ரீ அசாம் பாக்கி கூறினார்.

”அவர் இந்த வழக்கில் சந்தேகத்திற்குரியவர் என்று நான் கூற முடியும். ஏனெனில் முதலில், சொத்து விவரங்களை விவரிக்க அவருக்குப் பிரிவு 36 வழங்கப்பட்டது. இரண்டாவதாக, இந்தப் பணம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தொடர்புடையவர்களில் ஒருவராக இருப்பதால், இது குறித்து அவரிடமிருந்து விளக்கம் பெறப்படும்”, என்று அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, விசாரணைக்கு உதவும் பொருட்டு இஸ்மாயில் சப்ரி விளக்கம் அளிக்க வரும் புதன்கிழமை அழைக்கப்படுவார் என்று, இன்று எஸ்.பி.ஆர்.எம். தலைமையகத்தில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர்கள் சந்திப்பில் அசாம் பாக்கி அவ்வாறு கூறினார்.

விசாரணைக்கு உதவும் பொருட்டு, இதுவரை 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள 13 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அவர் விவரித்தார்.

ரொக்கப் பணத்தில், ஒரு கோடியே 40 லட்சம் ரிங்கிட் உட்பட ஜப்பான், சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அசாம் பாக்கி தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி இஸ்மாயில் சப்ரியின் முன்னாள் அதிகாரிகள் நால்வரை எஸ்.பி.ஆர்.எம். முன்னதாக கைது செய்திருந்தது.

மற்றொரு நிலவரத்தில், குறிப்பிட்ட உத்தரவின் அடிப்படையில் தான், முன்னாள் பிரதமருக்கு எதிரான விசாரணை நடத்தப்படுவதாக, ஒரு சில தரப்பினர்கள் கூறும் குற்றச்சாட்டை, டான் ஶ்ரீ அசாம் மறுத்திருக்கின்றார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் பெற்ற புகார்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

”இது தேர்ந்தெடுக்கப்பட்டதாக நீங்கள் நினைக்கிறீர்களா? அந்த கேள்வியை நான் உங்களிடம் திரும்பி கேட்கிறேன். இது அரசியல் விசாரணை என்று நினைக்கின்றீர்களா? நான் அப்படி நினைக்கவில்லை. எங்கள் கொள்கையை நான் கடைப்பிடிக்கின்றேன். பதவி மற்றும் பிரிவை அடிப்படையாக கொண்டிருக்காமல் நாங்கள் தொழில்ரீதியாகவும் நியாயமாகவும் விசாரணை மேற்கொள்கிறோம். யாரிடமிருந்தும் எந்த உத்தரவும் இல்லை”, என்றார் அவர்.

இதனிடையே, டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரியின் முன்னாள் அந்தரங்க தலைமைச் செயலாளரும், வழக்கின் முக்கிய நபருமான டத்தோ நசிமா ஹஷிம் வெளிநாட்டில் இருப்பதாக கூறும் கருத்தையும், அசாம் பாக்கி மறுத்துள்ளார்.

அவர் நாட்டில் இருப்பதாகவும் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Source : Bernama

#SPRM
#IsmailSabri
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

Comments are closed, but trackbacks and pingbacks are open.